கிளிநொச்சி மாவட்டத்தில்  மொத்தமாக 47517 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 32 121 குடும்பங்களுக்கு அரசின் உதவித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (08-04-2020) காலை பதினொறு மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற   கொவிட்19 விசேட செயலணி கூட்டத்தின் போதே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் போது பொது மக்கள் குறிப்பாக நாளாந்தம் உழைத்து வாழந்து வந்த குடும்பங்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாது சிரமப்பட்டனர். எனவே இவ்வாறானவர்களின் நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து செயற்றிட்டங்களையும்  கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களிடம் கொண்டு செல்வதில் உத்தியோகத்தர்கள் முதல் அனைத்து  தரப்பினர்களும் செயலாற்றி வருகின்றார்கள்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள  வேளை மக்களின் நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1.வீடுகளுக்குச் சென்று சமூர்த்திக் கொடுப்பனவு, 

2.காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கான ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு, 

3.4544 முதியவர்களுக்கான இரண்டாயிரம் ரூபாவாக வழங்கி வந்த முதியோருக்கான கொடுப்பனவு ஐயாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டு வீடுகளுக்குச் சென்று வழங்கப்படுகிறது.

4.2535 மாற்று வலுவுள்ளோர்களுக்கான கொடுப்பனவும் ஐயாயிரம் ரூபாவாக வழங்கப்படுகிறது.

5.346 சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு,

6. வருமானம் எதுவுமின்றி முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட 989 குடும்பங்களுக்கான கொடுப்பனவு

7.நடமாடும் வியாபார சேவைகள்.

8.வைத்தியசாலைகளில் மாதந்த கிளினிக் நோயாளர்களுக்கு வீடுகளுக்குச் சென்று மருந்துக்கள் வழங்கல்

9. விவசாயிகள் விவசாயம் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள், மானிய உரம் விநியோகம் .

போன்ற பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் தொடர்ச்சியாக மக்களின் நிலைமைகள் அவதானிக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தை பொறுத்தவரை 75 வீதமான குடும்பங்களுக்கு ஏதோவொரு வகையில் அரசின் உதவி திட்டங்கள் பெறுகின்ற வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.