சமூக இடைவெளி எதற்கு ? சற்று சிந்தியுங்கள் ! சுயநலத்தில் ஒரு பொதுநலனுக்காக செயற்படுங்கள் !

Published By: Priyatharshan

08 Apr, 2020 | 05:19 PM
image

- வீ.பிரியதர்சன் 

நாம் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் போது நாங்கள் சமூக இடைவெளியுடன் நடந்துகொள்ளாவிட்டால் எனக்கு அருகில் இருக்கும் நபர்  “ சமூக இடைவெளி” ( social distance) உடன் நிற்குமாறு ஏசுகிறார் அதனால் எமது நாட்டில் இதனை கட்டுப்படுத்த முடிகிறது என ஜேர்மனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தெரிவிக்கிறார்.

கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்று உலகநாடுகளில் பரவி இதுவரை 1,431,533 பேரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதுடன் 82,058 பேரை பலியெடுத்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்காத போதிலும் பல உலக நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் முழு முயற்சியுடன் இறங்கியுள்ளன.

இருந்தாலும் மனிதர்களை பலியெடுக்கும் இந்த கொரோனா நோய்த் தொற்று நாளுக்குநாள் ஆயிரக்கணக்கில் மனித உயிர்களை பலியெடுத்து வருகின்றது.

இதிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம்  சுகாதார பொறிமுறைகளை கையாளுமாறு அறிவுறுத்தியிருந்தது.

அதில் ஒரு பொறிமுறையே சமூக இடைவெளியைப் பேணுமாறு பல நாடுகளுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கு அமைய உலகநாடுகளில் பல நாடுகள் அதனை கடைப்பித்து வருகின்றன. அதனால் இந்த நோய்த் தொற்று அதிகம் பரவாமால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை நாம்அவதானிக்க முடிகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளதாலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாலும் இந்த “ சமூக இடைவெளி” ( social distance) பேணப்படுகின்றது. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் அனைத்தும் தவிடுபொடியாக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக காணப்படுகின்றது.

இந்த ஊரடங்குச் சட்டம் எதற்காக போடப்படுகின்றது என்பது தொடர்பில் இலங்கை மக்களிடத்தில் சரியான தெளிவின்மையாலேயே ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் சமூக இடைவெளியை பேணும் விதம் மக்களின் செயற்பாடுகள் தெளிவாக காட்டுகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றது. ஆனால் நாட்டு மக்கள் அந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரியவில்லை என்பதை ஊரடங்கு வேளைகளில் கைதுசெய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் கைப்பற்றப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் தெட்டத்தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 7 ஆம் திகதி வரை ஊரடங்கை மீறியமை தொடர்பில் 16124 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 4064 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, “கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்திற்குள் குறிப்பாக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதிவரை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்” என்று இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பேராரிசியர் இந்திக கருணாதிலகவினால் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் “அரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 ) 48 நாளைக்குள் நாங்கள் ஒரு சாதகமான நிலையொன்றை எதிர்பார்க்க முடியும். வழங்கப்பட்ட பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை கூடி தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

இலங்கையில் 2 ஆயிரம் வரையிலான கொரோனா தொற்று நோயாளர்களை பராமரிப்பதற்கான வசதிகளே காணப்படுகின்றன. இந்த எல்லை மீறப்படுமிடத்து எமது சுகாதாரத்துறை நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை கொண்டிராது. வசதிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படும். ஆகவே நாங்கள் இந்த நிலையை 2 ஆயிரத்திற்குட்பட்டவாறே மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனை நடைமுறைப்படுத்த தற்போதுள்ள சமூக இடைவெளியை 80 வீதம் மட்டில் அகில இலங்கை ரீதியில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக இடைவெளியை நாங்கள் கூடியவரை பேணுவது, ஆனால் சமூக இடைவெளியை பேணுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் சில இடங்களில் இடையிடையே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதன் மூலம் அந்த சமூக இடைவெளியானது மேலும் குறைக்கப்படுகின்றது.

ஆகவே சமூகத்திலுள்ளவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சமூக இடைவெளியை பேண முன்வரவேண்டும்.” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  சிறுவர் வைத்தியசாலைக் கிளையின் செயலாளராகவும் அதன் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா எனும் தொற்று நோய் என்ன செய்யலாம் !

வயதான பின்னர் நோயெதிர்ப்பு சக்தி குறைகின்றது. இதுவரை பதிவான கணிப்பின் பிரகாரம் வயதானவர்களையே கொரோனா அதிகம் தாக்குகின்றது.  ஆகவே எம்மையும் பாதுகாத்துக்கொண்டு குறிப்பாக எமது வீட்டிலுள்ள வயோதிபர்களை கவனமாக பாதுகாப்போம். 

அதிலும் குறிப்பாக இதய நோய், நீரிழிவு நோய்களை ஏற்கனவே கொண்ட வயோதிபர்களை கவனமாக பாதுகாப்பது அவசியம். 

கொரோனாவினால் ஏற்கனவே வயோதிபர்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஆகவே ஆரோக்கியமான உணவுவகைகளை வழங்குங்கள். உங்களிடமிருந்து அவர்களுக்கு நோய் பரவாமல் இருக்க, இடைவெளியை பேணுவதோடு சுத்தமாக இருங்கள். 

 வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி போன்றவற்றை முன்னெடுங்கள்.

வயோதிபர்கள் வழமையாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல், மருந்துகளை வீட்டிற்கு வரவழைத்து தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளுங்கள். 

குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் இது மிகவும் அவசியம். மருந்தகங்களுடன் தொடர்புகொண்டு அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்.

 ஒருவர் இருமினால் அதிலிருந்து பரவும் நீர்த்துளிகள் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கவே சமூக இடைவெளியை பேணுங்கள். 

பல இடங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. இது மிகவும் ஆபத்தானது. ஆகவே சமூக இடைவெளியை பேணுங்கள்.

 கடைகளுக்குள் மக்களை அனுமதிக்கும்போது, காற்றோட்டம் இல்லாத காரணத்தால் நோய் பரவும் அபாயம் அதிகம். ஆகவே பொருட்களை கடைக்கு வெளியில் விநியோகிக்க முடியுமானால் சிறந்தது. முடியுமானவர்கள், ஒன்லைனில் ஓடர் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.

பொதுவெளிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சிசெய்யுங்கள் .

 யாருக்கும் உதவி செய்ய வேண்டுமானால் தனியாக செல்லுங்கள். அல்லது இருவர் செல்லுங்கள். தயவுசெய்து அதற்கு மேலதிகமாக, கூட்டமாக செல்ல வேண்டாம்.

 திருமண வீடு அல்லது மரண வீட்டில் அநேகமானோர் ஒன்றுகூடும்போது, அதில் ஒருவருக்கேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

 கொரோனா பாதிப்பு காலத்தில் வீதிகளில் கூடியிருந்து கைக்காதீர்கள். 

 நாம் அணிந்துள்ள மாஸ்க்குகளை நாங்களே தொடக்கூடாது. காரணம் கைகளில் கிருமி இருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்னொருவருடைய மாஸ்க்கை எக்காரணம் கொண்டும் சரிசெய்யப் போகாதீர்கள்.

சர்ஜிக்கல் மாஸ்க், என் 95 மாஸ்க் என்பவை தொற்றை அண்டவிடாமல் தடுக்கும். இல்லாதவர்கள் துணியிலான மாஸ்க்கையாவது அணியலாம். குறைந்தபட்சம்  எம்மிடமிருந்து  மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருக்கும். ஆனால் துணியினால் ஆன மாஸ்க் எந்த வகையிலும் வைரஸ் உட்புகுவதை தடுக்காது.

 குடும்ப அளவில் பரவி வந்த கொரோனா தொற்று, இப்போது சில இடங்களில் சமூக மட்டத்தில் பரவ ஆரம்பித்துள்ளதால், அனைவரும் மாஸ்க் அணிவது அவசியம்.

 ஒரே மாஸ்க்கை அணிந்தால், தயவுசெய்து கழுவி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து மீள அணியுங்கள்.

 எப்போதும் நேர்மறையான கருத்துக்களை வழங்குவோம்.

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அல்லது நிவாரணம் வழங்கும் பகுதிகளுக்குச் சென்றால் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை மற்றும் சமூக இடைவெளியை பேணுங்கள்.  

 குறிப்பாக ஊடகவியலாளர்கள் கூடுமானவரை பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லாமல், தொலைபேசி அல்லது இணையம் வழியாக சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து செய்திகளை பெற முயற்சியுங்கள்.

 ஊடகவியலாளர்கள் உங்கள் வேலை நேரத்தை வரையறை செய்துகொள்ளுங்கள். காரணம், கொரோனா செய்தி அறிக்கையிடலின் போது ஏற்படும் மன அழுத்தத்தை நிவர்த்திக்க இது உதவும். 

வேலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் பாடல்களை கேளுங்கள், குடும்பத்தாருடன் கலந்துரையாடுங்கள், வேறு விடயங்களில் கவனத்தைச் செலுத்துங்கள்.

பொருட்களை விற்பனை செய்பவர்களின் தொடர்பு இலக்கங்களைப் பெற்று அதனூடாக பொருட்களை ஓடர் செய்து வீட்டிலிருந்தவாறு பெற்றுக்கொள் முயற்சியுங்கள்.

“எமது நாட்டிலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது பல உயிர்களை பலியெடுத்துள்ளது. இங்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுவாக மருந்தகங்கள், அத்தயாவசிய தேவைகளை பூர்த்திசெய்யக் கூடிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்கள் அனைவரும் ஒரு மாதத்திற்கு மேலாக வீடுகளுக்குள் முடிங்கியுள்ளனர். தேவையான நேரங்களில் ஒருவர் மாத்திரமே கடைகளுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு வீட்டுக்குள் வந்துவிடுவோம். இங்குள்ள மக்கள் சமூக இடைவெளியை நன்றாக பேணுகின்றனர். மக்கள் எங்கும் கூடமாட்டார்கள். அதற்கு எதிராக எவ்வித சட்டங்களும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மக்களே உணர்ந்து செயற்படுகின்றனர்“ என சுவிஸ் நாட்டில் வசிக்கும் பரம்சோதி மகாதீபன் தெரிவித்தார்.

“இங்கு அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி  இருக்கின்றோம். ஆனால் கடைகள் சாதாரணமாக திறந்துள்ளன. ஒரு மாதத்திற்கும் மேலாக வீடுகளுக்குள் தான் இருக்கின்றோம். ஆனால் உணவுப்பொருட்கள், மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்கு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்வோம். இங்கும் நாம் கடைகளுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை பேணுகின்றோம். அவ்வாறு நாம் சமூக இடைவெளியை பேணாது அருகிலிருப்பவருடன் நெருங்கும் போது அவரே நம்மை ஏசி சமூக இடைவெளியை பேணுங்கள் என்று சொல்லிவிடுவார் ’’என ஜேர்மனில் வசிக்கும் ரூபன் தெரிவித்தார்.

“இங்கு ஆரம்பத்தில் கவனிக்காது விட்டுவிட்டார்கள் குறிப்பாக சமூக இடைவெளியை ஆரம்பத்தில் பேணாது விட்டுவிட்டார்கள் அதனால் இங்கு இறப்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. நாங்கள் மரண பயத்துடன் தான் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றோம். நான் வசிக்கும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை எனது சொந்த நாடான இலங்கைக்கு வரக்கூடாது. சமூக இடைவெளியை பேணுமாறு’’ இத்தாலியில் வசிக்கும் அன்டனெட் தெரிவித்தார்.

மக்களாகிய நாம் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் மிகவும் அவதானமாக சமூக இடைவெளியை பேணக்கூடியவாறு நடந்துகொள்ளுங்கள். உங்களுக்கு அருகில் இருப்பவருக்கும் சமூக இடைவெளி தொடர்பில் தெளிவுபடுத்துங்கள்.

மக்கள் உணர்ந்து சமூக இடைவெளிகளை பேணும் போது தான் எதிர்காலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது.

எனவே இனிவரும் காலங்கள் நாட்டு மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. விழிப்புடனும் விவேகத்துடனும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். மக்களே சிந்தியுங்கள் சிறிது நேரம் ! சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள் ! வீட்டுக்குள் இருங்கள் ! வீட்டிலிருந்தே கடமைகளை நிறைவேற்றுங்கள் ! ஏனைய உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் !

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04