(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை எதிர்வரும் 14 நாட்களுக்கும் பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து நோயாளர்களும் இனங்காணப்படுவர்.

அவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்பட்டால் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக ஒழிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

முதலாவது இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியின் படையினரால் சிலாபம் இரனவிலவில் உள்ள கைவிடப்பட்ட முன்னாள் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கட்டிட வளாகமானது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலையாக மேம்படுத்தப்பட்டு நேற்று செவ்வாய்கிழமை சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர், தற்போது இனங்காணப்பட்டுள்ளதைப் போன்று எதிர்வரும் 14 நாட்களுக்குள் அனைத்து நோயாளர்களும் இனங்காணப்பட்டுவிட வேண்டும். 

காரணம் 14 நாட்களின் பின்னரே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. எனவே மேலும் இரு வாரங்களுக்கு இதே போன்று செயற்பட்டால் நாட்டில் இனங்காணப்பட வேண்டிய நோயாளர்கள் அனைவரும் இனங்காணப்படுவர். அவ்வாறு இனங்காணப்படுபவர்களை இது போன்ற வைத்தியசாலைகளில் அனுமதித்து சிகிச்சையளித்து அவர்களை குணப்படுத்த வேண்டும். 

இவ்வாறு அனைத்து நோயாளர்களும் குணப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவலை எம்மால் முற்றாக ஒழித்துவிட முடியும் என்றார்.

மேலும்,  40 படுக்கைகள் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய இந்த புதிய வைத்தியசாலை மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ரோபோ தொழில்நுட்பம் மற்றும் தன்னியக்க பைலட் வாகன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் தனித்தனி அறைகளுடன் மட்டுப்படுத்தப்பட இவ்வைத்தியசாலை 14 மருத்துவர்கள் மற்றும் 20 மருத்துவ ஊழியர்களைக் கொண்டு நிர்வகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட ஹேமாஸ் தனியார் நிறுவனம் மற்றும் அட்லஸ் நிறுவனம் நிதியுதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ரோபோக்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் ஒரு சிறப்பு விமான அமைப்பு மூலம் நோயாளிகளுக்கு மருந்து, பானங்கள் மற்றும் உணவுகளை வழங்குவதற்கும், ரோபோ கேமராக்கள் மூலம் நோயாளிகளுடன் தொடர்புகொள்வதற்கும்,  நோயாளிகளுக்கு நிலையான காற்றுச்சீரமை முறையை ஒழுங்குபடுத்துவதற்கும் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையிலான தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் தவிர்ப்பதை உறுதி செய்யக் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.