முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ  ஊழல் செய்துள்ளார் என்றோ   மோசடி செய்துள்ளார் என்றோ நாங்கள் எங்கும் கூறவில்லை.  இவை தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக  எவ்விதமான குற்றச்சாட்டும் யாராலும் முன்வைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

வேறு ராஜபக்ஷ மார் இவ்வாறு கழுத்தை அறுப்பதாக கூறினால்   அவர்களின் கழுத்துக்கள்  மீதமிருக்காது.   எனவே  மஹிந்த ராஜபக்ஷ மீது நாங்கள் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே   அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

 அங்கு எழுப்பபபட்ட கேள்வியும் அமைச்சர் அளித்த பதிலும் வருமாறு 

கேள்வி : தான் ஒரு டொலராவது மோசடி செய்துள்ளதாக  நிரூபிக்கப்பட்டால்   தனது கழுத்தை அறுத்துக்கொள்வதாக  முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளாரே? 

பதில் : முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ  ஊழல் செய்துள்ளார் என்றோ   மோசடி செய்துள்ளார் என்றோ நாங்கள் எங்கும் கூறவில்லை.  இவை தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக  எவ்விதமான குற்றச்சாட்டும் யாராலும் முன்வைக்கப்படவில்லை.  

எனவே  நிரூபிக்கப்பட்டால் தான் கழுத்தை அறுத்துக்கொள்வதாக   முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ கூறலாம். எனினும்  வேறு ராஜபக்ஷ மார் இவ்வாறு கூற முடியாது. 

வேறு ராஜபக்ஷ மார் இவ்வாறு கழுத்தை அறுப்பதாக கூறினால்   அவர்களின் கழுத்துக்கள்  மீதமிருக்காது.   எனவே  மஹிந்த ராஜபக்ஷ மீது நாங்கள் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அவர்  செய்திருக்கமாட்டார். அவர் செய்யவேண்டிய அவசியம் இல்லை.  செய்வதற்கு  பலர் இருந்தனர் தானே? என்றார்.