கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு முன்னணி நடிகரான  அஜித் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார்.

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என இந்திய அரசும், தமிழக அரசும் அறிவித்தன. இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் நிதி உதவி கொடுத்து, தமிழ் திரையுலகின் பங்களிப்பை தொடங்கிவைத்தார். 

இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரும் அரசிற்கு நிதி வழங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

தற்போது நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கும் நடிகர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி வழங்கி வருகிறார்கள்.

இந்த இரண்டு பட்டியலிலும் இதுவரை முன்னணி நடிகர்களான 'தல' அஜித், தளபதி விஜய் போன்றவர்கள் இடம்பெறவில்லை என்ற விமர்சனம் இருந்தது.

இந்நிலையில் அஜித்,  பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு 25 லட்ச ரூபாயும் வழங்கியிருக்கிறார். இதன் மூலம் தன்மீது எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்திருக்கிறார் 'தல' அஜித்.

இதனிடையே அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்பது குறிப்பிடதக்கது.