அரசியல், மத தீவிரவாதங்களும் கொரோனா வைரஸும்

08 Apr, 2020 | 12:28 PM
image

(பிரம்மா செலானி )

 உலகின் தற்போதைய நெருக்கடி சமாந்தரமில்லாதது. கொரோனாவைரஸ் நோய் ( கொவிட் - 19 ) பரவலை ஆரம்பத்தில் மூடிமறைத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் உலகின் மிகவும் மோசமான தொற்றுநோய் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு உதவியது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைப்போன்று, உலகின் மிகப்பெரியதும் மிகவும் பலம்பொருந்தியதும் நெடுங்காலமான நீடிக்கின்றதுமான எதேச்சாதிகாரம் செய்த காரியத்துக்காக " உலகம் பெரியதொரு விலையைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. "ஒரு நாட்டின் ஏதேச்சாதிகாரம் எவ்வாறு உலகை நாசமாக்கமுடியும் என்பதை மதிப்பிடமுடியாத மனித உயிரிழப்புகளும் பொருளாதார அழிவும் எமக்கு காண்பித்திருக்கின்றன.

 தொற்றுநோயைத் தீவிரப்படுத்துவது இன்னொரு தீவிரவாதமாகும். குறிப்பாக மதத்தில் காலூன்றி நிற்கும் தீவிரவாதத்தை கூறமுடியும். கொடிய கொரோனாவைரஸை பரப்புவதில் மதமாற்றத்தில் ஈடுபடுகின்ற இரு அடிப்படைவாத அமைப்புக்கள் வகித்திருக்கும் பாத்திரம் பொதுச்சுகாதாரத்தையும் தேசிய பாதுகாப்பையும் மதத்தீவிரவாதம் எவ்வாறு அச்சுறுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது.

 தென்கொரியாவின் மர்மமான ஷின்சியோன்ஜி யேசு திருச்சபை சீனாவின் வூஹானில் இருந்து வைரஸை இறக்குமதி செய்ததன் மூலம் பெரிய நெருக்கடியொன்றை மூளவைத்திருக்கிறது. வூஹானில் ஒன்றுகூடலொன்றை அந்த திருச்சபை நடத்தியிருந்தது. தென்கொரியாவில் கொவிட் -- 19 வைரஸின் தொற்றுக்கு இலக்கானவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் இந்த மர்மமான மதப்பிரிவுடன் தொடர்புபட்டவர்களேயாகும்.

அதேவேளை, பல நாடுகளில் கிளைகளைக்கொண்ட இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான தப்லீக் ஜமாத் மலேசியாவிலும் பாகிஸ்தானிலும் இந்தோனேசியாவிலும் பெரிய கூட்டங்களை நடத்தியதன் மூலம் தென்கிழக்காசியா தொடக்கம் மேற்காசியா வரை பல நாடுகளுக்கு நோய்க்கிருமியை ஏற்றுமதி செய்திருக்கிறது. சுன்னி மதப்பிரிவைச் சேர்ந்த இந்த இயக்கத்தின் புதுடில்லி கூட்டம் இந்தியா பூராவும் வைரஸை பரப்பியிருக்கிறது.

  பயங்கரவாதக்குழுக்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான களமாக நீண்டகாலமாக விளங்கிவருவதாகக் கூறப்படுகின்ற தப்லீக் ஜமாத் அதன் மிகப்பெரிய நிகழ்வுகளின் ஊடாக மிகப்பெரிய வைரஸ் பரப்பியாக வெளிக்கிளம்பியிருக்கிறது. பெப்ரவரி இறுதியில் கோலாலம்பூரின் ஸ்ரீ பெற்றாலிங் பள்ளிவாசலில் 16 ஆயிரம் பேர் கலந்துகொண்ட அதன்நான்கு நாள் கூட்டம் 6 தென்கிழக்காசிய நாடுகளுக்கு நோயைப் பரப்பியிருக்கிறது.

லாகூரில் மார்ச் 11 - 12 நடைபெற்ற கூட்டம் சுமார்  இரண்டரை இலட்சம் பேரைக் கவர்ந்திழுத்தது. ஆனால், சுன்னி முஸ்லிம் உலகில் மிகப்பெரிய வைரஸ் காவியை உருவாக்கி மிகவும் பரந்த ஒரு  பிராந்தியத்துக்கு ( கிர்கிஸ்தான் தொடக்கம்  காசா பள்ளத்தாக்கு வரை ) கொரோனாவைரஸை பரப்பியதில் அது முடிந்திருக்கிறது.

    மதத்தீவிரவாதம் எப்போதுமே நாசகாரத்தனமானது என்பதே படிப்பினையாகும். ஈரான் விவகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுவதைப் போன்று உண்மையில், மதவெறியர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கை கொவிட் --19 பரவலில் முக்கியமான ஒரு விசைவில்லாக இருந்து வந்திருக்கிறது. ஈரானின் பெரிய நகரங்களில் ஒன்றான குவாம் அந்த நாட்டின் வைரஸ் தொற்றுநோயின் மையமாக மாறியிருக்கிறது. வைரஸ் ஆபத்தை கருத்தில் எடுக்காமல்  மதத்தலைவர்கள் பக்தர்களை தொடர்ந்து அழைத்தவண்ணம் இருந்ததே அதற்கு காரணமாகும்.

அந்த நகரில் உள்ள மசுமெஹ் வணக்கத்தலத்திறகுள் இருக்கும் கல்லறை மேட்டை  நாவினால் நக்கினால் தொற்றுநோயில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறி பக்தர்களை அவ்வாறு செய்யுமாறு அவர்கள் வேண்டிக்கொண்டார்கள். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்து பஹ்ரெய்ன் மற்றும் லெபனான் வரையள்ள நாடுகளுக்கு ஈரானில் இருந்தே வைரஸ் பரவியது என்பது பின்னர் கண்டறியப்பட்டது.

  அதேபோன்றே, இஸ்ரேலிலும் மரபு வழுவாத கடுந்தீவிரவாத யூதர்கள் ( சனத்தொகையில் 12 சதவீதத்தினர் )  அரசாங்கம் எடுத்த கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு  இணங்கிச் செயற்பட மறுத்ததன் மூலமாக கொரோனாவைரஸ் துரிதமாகப் பரவுவதற்கு வழிவகுத்தார்கள்.  மக்களை பாதுகாகுமுகமாக அந்த யூதர்கள் வாழும் பகுதிகளையும்  சுற்றுப்புறங்களை கண்காணிப்பற்கு இப்போது அரசாங்கம் பாதுகாப்புப் படைகளை கடமையில் ஈடுபடுத்தியிருக்கிறது.

    இந்தியாவில், மார்ச் 25 - ஏப்ரில் 2 புனித நகரான அயோத்தியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்து பாதயாத்திரையை அதிகாரிகள் தடுத்துநிறுத்திவிட்டார்கள். மக்கள் ஒன்றுகூடுவதற்கு அதிகாரிகள் முன்கூட்டியே தடைவிதித்ததுடன் வெளியார்  அயோத்திக்குள் பிரவேசிப்பதையும் தடுத்துவிட்டனர். ஆனால், பதுடில்லியில் தப்லீக் ஜமாத்தின் கூட்டம் மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.

      சுலவேசி தீவில் நடைபெறவிருந்த இதேபோன்ற நிகழ்வொன்றை இந்தோனேசியா தடைசெய்தது. ஆனால், அந்த தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாகவே 10 நாடுகளில் இருந்து 8,500 க்கும் அதிகமான தப்லீக்குகள் ஏற்கெனவே அங்கு கூடிவிட்டார்கள். ஆனால், இந்தியா வெளிநாட்டவர்கள் உட்பட தப்லீக் ஜமாத் செயற்பாட்டாளர்களை மார்ச் 13 ஆம் திகதியில் இருந்து ( தொற்றுநோய் குறித்த பிரகடனத்தை  மத்திய அரசாங்கம் வெளியிட்டு சகல பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை மூடுமாறு உத்தரவிட்ட தினத்துக்கு மறுநாள் ) தலைநகரில் கூடுவதற்கு அனுமதித்துவிட்டது.

இவ்வாறு அரசாங்கம் ஏன் நடந்துகொண்டது என்பதை விளங்கிக்கொள்ளமுடியவில்லை. ஆனால், இதற்கு மாறாக, மகாராஷ்டிரா  அரசாங்கம் மாநிலத்தில் நடைபெறவிருந்த தப்லீக் ஜமாத் கூட்டத்துக்கு ஏற்கெனவே வழங்கியிருந்த அனுமதியை ரத்துச் செய்தது.

    புதுடில்லி கூட்டம் ஏப்ரில் 1வரை 18 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது. ஏப்ரில் 1 2346 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதித்துவிட்டு இப்போது அரசாங்கம் " குதிரைகள் எல்லாம் வெளியே ஓடிவிட்டபிறகு யாயத்தின் கதவுகளை மூட முயற்சிக்கின்றது." கூட்டத்தில் கலந்துகொண்ட சகலரையும் அடையாளம் கண்டு தொற்று தடுப்புக்காவலில் வைக்கவும் அரசாங்கம் தவறிவிட்டது. தப்லீக் ஜமாத் நிகழ்வுடன் தொடர்புடைய குறைந்தது 1445 பேருக்கு கொவிட் -- 19 தொற்றியிருப்பது மருத்துவச்சோதனையில் உறுதிசெய்யப்பட்டது. பலர் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

       சட்டத்தை மீறியவகையில் நடத்தப்பட்ட தப்லீக் ஜமாத்தின் கூட்டத்தை முடித்துவிடுமாறு கேட்பதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அந்த இயக்கத்தின் தலைவர்களிடம் நேரடியாகச் செல்லவேண்டியிருந்தது என்பது கவலைக்குரிய ஒரு நிலைமையாகும்.புதுடில்லியின் சஹீன் பாக் சம்பவத்தின் மூலம் அரசாங்கம் எதையும் படித்ததாக தெரியவில்லை. எந்தவொரு நாடுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் நெடுஞ்சாலையொன்றை ஒரு மணி நேரத்துக்கூட  போக்குவரத்துகளை தடுத்துநிறுத்தி முற்றுகையிடுவதற்கு அனுமதிக்காது.ஆனால், இங்கு குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து வீதிகளை முற்றுகையிட்டிருந்தவர்களுக்கு எதிராக மக்கள் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அரசாங்கம் வீதி முறறுகையை ஒரு மாதகாலத்துக்கு  பொறுத்துக்கொண்டது. ஆனால், அவ்வாறு எதுவும் இடம்பெறாத நிலையில், சஹீன் பாக் முற்றுகை டில்லியின் வடகிழக்கு புறநகர்ப்பகுதியில் அதேபோன்ற முற்றுகைக்கு தூணாடுதலாக அமைந்தது.இறுதியில் அது படுமோசமான இனவன்முறைகளுக்கு வழிவகுத்தது.

      தன்னை அரசியல்சாராத இயக்கம் என்று உரிமைகோருவதன் மூலமாக ஜமாத் தப்லீக் தனது மிலெனேரியன் கோட்பாட்டை மூடிமறைக்கிறது. தேசிய எல்லைகளை அங்கீகரிக்கவும் மறுக்கிறது.அல் -- கயெடா மற்றும் தலிபான் தொடங்கி அதிலிருந்து தோன்றிய கிளை அமைப்புக்களான ஹரகட் உல் -- முஜாஹிதீன் மற்றும் ஹரகட்  -- உல் ஜிஹாத் -- இ இஸ்லாமி வரை பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆட்திரட்டல் செய்யும் நடவடிக்கைகளுடன் தப்லீக் ஜமாத்தை சில புலனாய்வு நிறுவனங்கள் தொடர்புபடுத்துகின்றது.ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை ஜமாத் உத்தியோகபூர்வமாக உறுதியாக நிராகரித்திருக்கிறது.

    பாகிஸ்தான் இராணுவத்துடன் தப்லீக் ஜமாத்துக்கு இருக்கும் வெளிப்படையாக தெரிந்த உறவுகளை இந்தியா கண்டும் காணாமல் விட்டுவிட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து இயக்கத்துக்குச் சேர்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர்களை பாகிஸ்தானின் றைவின்ட் பகுதியில் உள்ள அதன் தலைமையகத்துக்கு வரவழைக்கும் தப்லீக் ஜமாத், பயங்கரவாத இயக்கங்கள் புதிதாக பயிற்சிக்காக  ஆட்திரட்டல் செய்வதற்கு அனுமதித்திருப்பதாக அறியவருகிறது.

புதிய பயங்கரவாதிகளை திரட்டுவதற்காக அல் -- கயெடா இயக்கம் தப்லீக் ஜமாத்தை பயன்படுத்தியதை  அமெரிக்க சமஷ்டி புலனாய்வு பணியகம் கண்டுபிடித்ததாக  2003 ஆம் ஆண்டில் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரமான  அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்தது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றவாளிகளாகக் காணப்பட்ட பல மேற்கு நாட்டவர்களுக்கு  தப்லீக் ஜமாத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தார்கள்.' அமெரிக்கன் தலிபான் ' ஜோன் வாக்கர் லிண்ட், ஷூ பொம்மர் ' றிச்சர்ட் றீட் , ' டேர்ட்டி பொம்மர் ' ஜோஸ் படில்லா மற்றும் நியூயோர்க்கின் புரூக்ளின் பாலத்தை குண்டுவைத்து தகர்க்க திட்டமிட்ட லிமான் ஹரிஸ் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

       பயங்கரமான ஒரு தொற்றுநோயை உலகிற்கு கொடுத்த சீன எதேச்சாதிகாரமும்  அந்த நோய் பரவலை தீவிரப்படுத்துவதில் மதவெறியர்கள் வகித்திருக்கும் பங்கும் அரசியல் தீவிரவாதத்தினாலும் மதத்தீவிரவாதத்தினாலும் உலகம் செலுத்தவேண்டியிருக்கும் விலையை அம்பலப்படுத்தியிருக்கின்றன. தீவிரவாதம் என்பது சுமுதாயங்களளின் சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கு நேரெதிரானது.

    அரசியல் மற்றும் மத வெறித்தனத்தினத்தின் விளைவான கொடிய குணாம்சம் தற்போதைய உலகளாவிய தொற்றுநோயின் போது மேலும் கூடுதலான அளவுக்கு தெளிவாக தெரிகிறது. தீவிரவாதங்களிடமிருந்து வருகின்ற அச்சுறுத்தலை கட்டுப்படுத்த ஒரேவழி தீங்குவிளைவிக்கின்ற அவற்றின் கோட்பாடுகளை அவப்பெயருக்குள்ளாக்குவதேயாகும். அல்ஜீரிய எழுத்தாளர் மௌலூத் பென்சாடி  கூறியதைப் போன்று " தீவிரவாதிகளைக் கொலைசெய்தால், மேலும் பல தீவிரவாதிகள் தோன்றுவார்கள். தீவிரவாத கோட்பாடுகளைம் கொலைசெய்தால்  தீவிரவாதம் மறைந்துவிடும்."

 ( இந்துஸ்தான் ரைம்ஸ் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04