கொரோனா வைரஸ் தோற்றம் பெற்று சீனாவில் பரவ ஆரம்பித்தபோதே அதன் வீரியம் கூறித்தும் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் குறித்தும் விஞ்ஞானிகளும், அறிஞர்களும் எச்சரிக்கை செய்தனர்.

அதற்கமைய இன்று உலகம் ஒரு கண்ணுக்குத் தெரியாத வைஸின் பிடியில் சிக்கி உலகளாவிய ரீதியில் 82,034 உயிர்களை பலியெடுத்துள்ளது.

தலைசிறந்த தலைவர்களையும் மனிதர்களையும், குடும்ப உறவுகளையும் இழந்து தவிக்கும் மக்கள் இன்னும் எத்தனை இழப்புகளை சந்திக்கப்போகிறோமோ என்ற விரக்தியில் உள்ளனர்.

உலகளாவிய ரீதியில் 209 நாடுகளையும் பிராந்தியங்களையும் பாதித்துள்ள இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  1,430,919 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி 84,915 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 7,380 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை கொவிட் 19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 301,905 பேர்  உலகளாவிய ரீதியில்  முழுமையாக குணமடைந்துள்ளனர். 

உலகின் வல்லரசு நாடுகளை மிக மோசமாக தாக்கியுள்ள இவ் வைரஸ் அமெரிக்காவில் நேற்றைய தினம் 1,970 பேரை பலியெடுத்துள்ளது.

அமெரிக்காவில் வைரஸின் தாக்கம் தொடர்ந்து உச்சகட்டத்தில் நிலவிவரும் நிலையில் நேற்றைய தினத்தில் அங்கு 33,331 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 400,335 ஆக உயர்ந்துள்ளது. 

இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் விளங்குகின்றது. இங்கு நேற்றைய தினம் 704 பேர் கொவிட் காரணமாக உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,045ஆக உயர்ந்துள்ளது.   

இது இத்தாலியை விட குறைவானாலும், ஸ்பெயினில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 141,942 ஆக காணப்படுகின்றது. நேற்றையதினம் மாத்திரம் 5,267 பேர் இங்கு தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன் 43,208 பேர் குணமடைந்துள்ளனர்.

இத்தாலியில் நேற்றைய தினம் 3,039 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து இங்கு தொற்று எண்ணிக்கை 135,586 ஆக உயர்வடைந்துள்ளது, இதே வேளை 604 புதிய இறப்புகளுடன் இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 17,127 ஆக உயர்ந்துள்ளது. 24,392 பேர் குணமடைந்துள்ளனர். 

இதற்கு அடுத்த நிலையில் உள்ள ஐரோப்பிய நாடான பிரான்ஸில் நேற்றைய தினம் 1,417 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 10,328 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றையதினம் அதிக  உயிரிழப்புகள் பதிவான இரண்டாவது நாடாக பிரான்ஸ் உள்ளது, இதுவரை அங்கு 109,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று மாத்திரம் அங்கு 11,059 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 19,337 பேர் குணமடைந்துள்ளனர்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஜேர்மனியின் நிலை ஆறுதல் அளிக்கின்றது. அங்கு இதுவரை 107,663 பேர் பதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,016 பேர் உயிரிழநதுள்ளனர். நேற்றையதினம் அங்கு 206 பேர் மரணமடைந்துள்ளதுடன் 36,081 பேர் குணமடைந்துள்ளனர்.

ஈரானில் வைரஸ் தொற்று காரணமாக  62,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 3,872 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 133 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் இதுவரை 55,242 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,159 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 786 பேர் பலியாகியுள்ளனர்.

கொனாரா தொற்றுக்குள்ளான நிலையில் சுயதனிமைப்படுத்தலில் இருந்து வந்த பிரித்தானியாவின் பிரதமர்  போரிஸ் ஜோன்சன் நேற்றைய தினம் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் வைரஸின் பிறப்பிடமாக அறியப்படும் சீனாவில் நேற்றையதினம் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 32 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்  பெல்ஜியத்தில் 2,035 இறப்பும், நெதர்லாந்தில் 2,101 இறப்பும் பதிவாகியுள்ளது. 

வல்லரசுகளில் ஒன்றான இந்தியாவில் வைரஸ் தொற்று காரணமாக  5,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 160 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் அங்கு 24  பேர் பலியாகியுள்ளதுடன் இதுவரை 468 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இதுவரை  6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 185 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 42 பேர் குணமடைந்துள்ளனர்.