(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரோனா வைரஸுடன் இனவாத வைரஸையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன் நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பது அனைவரதும் கடமை. ஒருசிலர் சட்டத்துக்கு முரணாக நடப்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றம் சாட்டுவது முறையில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். 

நாட்டில் கொராேனா தொற்றுடன் ஒருசில ஊடகங்கள் மேற்கொண்டு வரும் இனவாத பிரசாரம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொராேனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஓர் அங்கமாகவே ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் ஒன்று கூடல்களை நிறுத்தியுள்ளது. என்றாலும் ஒரு சில பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் சிலர் நடந்துகாெள்கின்றனர்.

நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பது அனைவரதும் கடமையாகும். அதனை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் ஒரு சில சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் சட்டத்தை மீறி செயற்படும் போது அதனை ஒருசில சிங்கள தனியார் ஊடகங்கள் பெரிதுபடுத்தி, அதனை குறித்த சமூகத்தின் தவறாக சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றன. இவர்களின் நடவடிக்கையால்  பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை சமூகம் தொடர்பாக தவறான சிந்தனையே ஏற்படுகின்றது.

குறிப்பாக முஸ்லிம்கள் தான் கொரோனா வைரஸை பரப்புவதாக சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றன. ஒரு சில முஸ்லிம் நபர்கள் சட்டத்துக்கு முரணாக செயற்பட்டதற்காக அதனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் குற்றம் சாட்டுவது முறையல்ல. அத்துடன் அண்மையில் கொரோனா தொற்று தொடர்பாக பரிசோதிக்க சென்ற பொது சுகாதார அதிகாரி ஒருவர் மீது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

குறித்த இளைஞர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஊடகங்களில் அதுதொடர்பில் செய்தி மாத்திரமே வந்தது. ஆனால் இதனை ஒரு சிறுபான்மை இனத்தவர் செய்திருந்தால், அது இன்று பாரியளவில் ஊதிப் பெருப்பிக்கப்பட்டிருக்கும். நாட்டில் இருக்கும் ஒரு சில தனியார் சிங்கள ஊடகங்கள் மக்களுக்கு செய்திகளை வழங்குவதைவிட சிங்கள மக்களுக்கு இவ்வாறான இனவாத கருத்துக்களை பிரசாரம் செய்யும் நடவடிக்கையையே மேற்கொள்கின்றன.

அத்துடன் கொராேனா வைரஸுக்கு பாதிக்கப்பட்ட நாடுகள் வைரஸை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்டும்போது எமது நாட்டில் கொராேனாவையும் இனவாதமாக்கியுள்ளதால் வைரஸை கட்டுப்படுத்த நடடிக்கை எடுப்பதுடன் இனவாத பிரசாரங்களையும் கட்டுப்பத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் நாடு எதிர்கொண்டுள்ள இந்த பயங்கரமான நிலையில் இருந்து மீள அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறை அதனை அந்த சமூகத்தின் தவறு என பார்க்காமல், யார் தவறு செய்தாலும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.