பிரதமர் பொறிஸ்ஜோன்சனிற்கு வழமையான ஒக்சிசன் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது, அவர் செயற்கை சுவாசக்கருவிகளின் உதவியின்றி சுவாசிக்கின்றார் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் திறமை வாய்ந்த மருத்துவ குழுவினர் பொறிஸ்ஜோன்சனிற்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குகின்றனர் அவர் ஸ்திரமான நிலையில் காணப்படுகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் சிறந்த உணர்வுடன் காணப்படுகின்றார் அவரது உடல்நிiiயை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு ஆதரவுவெளியிட்டு மிகப்பெருமளவானவர்கள் செய்திகளை வெளியிட்டுள்ளனர்,அனைவரும் பிரதமர் விரைவில் குணமடையவேண்டும் என பிரார்த்தித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் இந்த நிலை எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான விடயமாகவே அமைந்துள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ராப் அவர் வெறுமனே பிரதமர் மாத்திரமல்ல எங்களின் தலைவர் எங்களின் சகா எங்களின் நண்பன் என குறிப்பிட்டுள்ளார்.

;பிரதமர் குறித்து எனக்கு தெரிந்த விடயமொன்று உண்டென்றால் அது அவர் போர்க்குணம் மிகுந்தவர் என்பதே அது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இதன் காரணமாக அவர் இந்த நோயின் பிடியிலிருந்து மீளுவார் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்தில் அவர் மீண்டும் இந்த நெருக்கடிக்கான போராட்டத்தில் எங்களை வழிநடத்துவார் எனவும் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.