ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பொருட்படுத்தாமல் அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் வட கொரியாவிற்கு தமது கடுமையான கண்டனத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

வட கொரியா இன்று (22) அதிகாலை  பல கிலோ மீற்றர்கள் சென்று தாக்கக்கூடிய இரண்டு சக்திவாய்ந்த 'முசுடன்" ரக ஏவுகணைகளை வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் பரிசோதித்துள்ளது.

பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகளில் ஒரு ஏவுகனை 150 கிலோ மீற்றர் தொலைவில் விழுந்து தோல்வியடைந்தள்ளதாகவும், மற்றொரு ஏவுகணை தொடர்பான தெளிவான தகவல் வெளியாகவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது.

குறித்த இரு ஏவுகணைகளும் செயலிழந்து ஜப்பானில் உள்ள மஞ்சள் கடல் பகுதியில் விழுந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

வட கொரியாவினால் இன்று பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகள் சுமார் 4000 கிலோ மீற்றர் வரை சென்று தாக்க கூடிய வல்லமை பொருந்தியதென தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சர்வதேசத்தின் நிலைப்பாட்டை மீறி அணு ஆயுத பரிசோதனை செய்வதை உடனடியாக நிறத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பொருட்படுத்தாமல் இதற்கு முன்னரும், இன்றும் வடகொரியா நடத்தியுள்ள ஏவுகணை பரிசோதனைகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும், இதுபோன்ற செயற்பாடுகள் மூலம் தற்போது வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளை மேலும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் இதுபோன்ற செயல்களை கைவிட்டு, சர்வதேச நிர்பந்தங்களுக்கு இணங்கி, ஆக்கப்பூர்வமான வகையில் செயற்படுமாறு வடகொரியாவை கேட்டுக்கொள்வதாக அமெரிக்க வெளியுறவுத் துறை ஊடகப் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.