கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்தின் நேரடி நிவாரண உதவிகள் இன்றி மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதி மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது அனைவரும் அறிந்த ஓர் விடயம். இந்நிலையில் தலைநகரில் தொழில் நிமித்தம் தங்கியிருக்கும் மலையக பெருந்தோட்டப் பிரதேச தமிழர்களை அங்கிருந்து தமது சொந்த இடங்களுக்கு அனுப்ப அரசாங்கம் எத்தனிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒவ்வொருவரும் தத்தமது பாதுகாப்பு குறித்து சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமது அயல் வீட்டாரை கூட சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலைமை தோன்றியுள்ளது. 

ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட திகதியிலிருந்து தலைநகரில் தொழில் புரியும் பலரும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்குக் காரணம் அங்கு தொழில் புரிவோரில் 75 வீதத்துக்கும் மேற்பட்டோர் விடுதிகளிலும் வீடுகளிலும் தங்கியிருப்பவர்கள். சமைத்து உண்பவர்களை விட உணவை வௌியில் பெற்றுக்கொள்பவர்களே அதிகம். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எழும் பிரதான பிரச்சினையே உணவுக்கு என்ன செய்வது என்பதாகும். 

இதன் காரணமாக ஊரடங்கு நீக்கப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பலரும் மலையகத்தை நோக்கி வருகின்றனர். மேலம் மலையக  அரசியல்வாதிகளும் தலைநகரிலிருக்கும் மலையக இளைஞர் யுவதிகளை அழைத்துவருவதற்குரிய ஏற்பாடுகளை போட்டி போட்டுக்கொண்டு செய்து வருகின்றனர். இதற்குப் பிரதான காரணமாக இருப்பது என்னவென்றால் இந்த பிரதிநிதிகளால் தற்போதைய சூழ்நிலையில் தலைநகரில் இருக்கும் மலையக சமூகத்தின் பிரச்சினைகளை எவ்வகையிலும் தீர்க்க முடியாது என்பதாகும். 

அதாவது தொழில் நிமித்தம் தங்கியிருக்கும் இளைஞர் யுவதிகள் ஏனையோரின் நலன்கள் குறித்து இந்த வைரஸ் தொற்று காலத்தில் அரசாங்கத்தால் தனிப்பட்ட ரீதியாக கவனம் செலுத்த முடியாமையே இதற்குக் காரணம். இதன் காரணமாக சில வேளைகளில் அரசாங்கமே அவர்களை இங்கிருந்து அற்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதோ தெரியவில்லை.

ஏனென்றால் ஊரடங்குச் சட்டம் முதன் முதலில் பிறப்பிக்கப்பட்ட மார்ச் 20 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தலைநகரில் சிக்கிக்கொண்டு தடுமாறிக்கொண்டிருந்த போது வாய் திறக்காமல் மௌனம் காத்த மலையக அரசியல்வாதிகள் இன்று போட்டி போட்டுக்கொண்டு தமது முகநூல் பக்கத்தில்  தலைநகர் வாழ் சொந்தங்களை அழைத்து வருவதாக தொலைபேசி இலக்கங்களையும் பதிவிட்டிருந்தனர். 

நுவரெலியா மாவட்டத்தின் சில நகரங்களில் தலைநகரிலிருந்து வருபவர்களையும் 14 நாட்கள் தனிமைப் படுத்தும் செயற்பாடுகளை பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்களும் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதை அறிந்து கொண்டு ஏன் இந்த அரசியல் பிரமுகர்கள் தலைநகரிலிருந்து மலையக இளைஞர் யுவதிகளை அழைத்து வருவதில் அக்கறை காட்டுகின்றார்கள் என்பது புரியவில்லை.

அரசாங்கத்தின் பொறுப்பு

இலங்கையின் எல்லா இன மக்களுக்குமான  ஜனாதிபதியாக இருப்பேன் என்ற கோஷத்தோடு ஆட்சி பீடமேறிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூட மலையக சமூகம் பற்றி எந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மிக முக்கியமாக தலைநகரில் தொழில் நிமித்தம் வசித்து வரும் மலையக இளைஞர் யுவதிகள் இந்த சூழ்நிலையில் எவ்வாறு தமது சொந்த இடங்களுக்குச் திரும்பிச் செல்வர், அவ்வாறு செல்ல முடியாது விட்டால் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள், வீடுகள் அல்லது வர்த்தக ஸ்தாபனங்களில் அவர்களை தொடர்ந்தும் தங்க வைக்க முடியுமா போன்ற விடயங்களை கண்டு கொள்ளவில்லை.

இதை மலையக அரசியல்வாதிகளும் கண்டும் கடந்தே சென்றனர். தாம் வசிக்கும் பிரதேசத்திலுள்ள மக்களுக்கே நிவாரணங்களைப் பெற்றுத்தராத இவர்கள் எங்கே தலைநகரில் வசித்து வருவோருக்கு நிவாரணம் வழங்கப்போகின்றனர்?

இதே வேளை இவ்வாறு நாளுக்கு நாள் பலரும் பல்வேறு காரணங்களை கூறி பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி மாவட்டங்களுக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே தலைநகரில் பணி செய்பவர்கள். இவ்வாறு தமது சொந்த இடங்களுக்கு வந்து சேரும் இவர்களின் எதிர்கால வாழ்வாதாரம் குறித்த  மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக இவர்களுக்கு தற்போது தமது சொந்த இடங்களிலும் எந்த பணிக்கும் செல்ல முடியாது. பெருந்தோட்டத்தொழிலில் ஈடுபட்டு வரும் தமது பெற்றோர்கள் ,உறவினர்களிலும்  தங்கியிருக்க முடியாது, ஏனென்றால் அவர்களே தற்போது வருமானமின்றியும் அரசாங்கத்தின் நிவாரணங்களின்றியும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தலைநகரிலிருந்து வருவோர் இன்னும் எத்தனை காலங்களுக்கு இவ்வாறு தொழிலின்றி தமது சொந்த இடங்களில் இருக்கப்போகின்றனர்? 

எல்லோருக்கும் பிரச்சினை இருக்கின்றது.

 இன்றைய சூழலில் உலக நாடுகளே கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கியுள்ளன. இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. இருப்பினும் காலங் காலமாக எல்லா விடயங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் பெருந்தோட்ட மலையக சமூகம் இத்தகையதோர் சூழலிலும் அநாதரவாக்கப்பட்டுள்ளமை குறித்தே இங்கு பேசப்பட வேண்டியுள்ளது. மீனவர்கள்,  விவசாயிகள், கிராம மக்கள் ஆகியோரின்   பிரச்சினைகள்  நேரடியாகவே  அரசாங்கத்தினால் தீர்க்கப்பட்டிருக்கும் போது இங்கு பெருந்தோட்ட சமூகம் எந்த வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாது பணி செய்ய நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர். அதே வேளை கடன் வழங்கல் அடிப்படையில் இவர்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 

கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் மட்டுமல்ல இல்லாவிட்டாலும் கூட தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதற்கு மலையக மக்களே சிறந்த உதாரணம்.

தேசியன்