(சிவலிங்கம் சிவகுமாரன்)

கொரோனா தொற்றுக்கு முன்பே முகக்கவசங்களை உலக நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா விளங்கியது.  அதாவது பூகோளத்தின் அரைவாசிக்கு மேற்பட்ட நாடுகளின் முகக்கவச தேவையை பூர்த்தி செய்த நாடாக அது இருந்தது.  கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின்னர் உள்நாட்டில்  விநியோகிப்பதற்கே சீனாவுக்கு அதிக  முகக் கவசங்கள் தேவைப்பட்டன. இதன் காரணமாக சீனா தனது உற்பத்தியை 12 மடங்காக அதிகரித்தது. அதேவேளை ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்த்தது.  ஆனால் நடந்ததோ வேறு.

வைரஸ் தொற்று உலக நாடுகளுக்கு பரவத்தொடங்கியதும் பல நாடுகள் இறக்குமதி உற்பத்திகளை தடை செய்தன. மேலும் சீனத்தயாரிப்புகள் முற்றாக முடங்கிப்போயின. உலக நாடுகள் அனைத்துக்கும் கொரோனா வைரஸ் பரவியிருப்பதால் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த நாடுகளின் அரசாங்கங்கள் தமது நாட்டில் புதிதாக முகக் கவச உற்பத்தியை ஆரம்பிக்க முடியாது இருக்கின்றன.  தற்போது உலகின் முகக் கவசங்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத அழுத்தங்களுக்கு சீனா உட்பட்டுள்ளது.   இதே வேளை இந்த கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில் முரண்கள் அதிகரித்துள்ளமையை உலகமே அறியும். இந்த வைரஸை சீன வைரஸ் என அமெரிக் ஜனாதிபதி ட்ரம்ப் பல சந்தர்ப்பங்களில் அழுத்தமாக உச்சரித்திருந்தமை சீனாவை எரிச்சலுக்குட்படுத்தியிருந்தது.

இதே வேளை இந்த முகக்கவச தட்டுப்பாட்டை மையமாக வைத்து அமெரிக்கா சீனாவை மீண்டும் சீண்டியிருக்கின்றது. அதாவது அமெரிக்கா சார்பாக முகக் கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பலவற்றை சீனாவானது கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அந்த வர்த்தகத்தில் தலையிட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கிறது. இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு முகக் கவசங்களின் தேவை அதிகரித்துள்ளது. உலக வல்லரசு என மார் தட்டி வந்த அமெரிக்காவையே இந்த வைரஸ் நிலைகுலைய வைத்துள்ளமை அதற்கு கௌரவ பிரச்சினையாகவுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் வைத்திய சேவைகளில் உலகில் முதல் நிலையிலிருக்கும் அமெரிக்கா இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது தவித்து வருகின்றமை சீனாவுக்கு உள்ளூர மகிழ்ச்சியை தந்துள்ளது என்பதும் உண்மையே. 

இதே வேளை தமது நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும் சீனா சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. முகக்கவசங்களை தயாரித்து பல நாடுகளுக்கு இலவசமாக அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  இது நல்லெண்ண அரசியலின் வௌிப்பாடாக இருக்கும்.  தற்போதைய சூழ்நிலையில் முகக்கவசங்களின் தேவையை உணர்ந்துள்ள சீனா தனது வர்த்தகத்தை சீராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. 

முதல் தொற்றாளர் யார்?  

இதே வேளை உலகெங்கும் 50 ஆயிரம் மரணங்களையும் இலட்சக்கணக்கானோருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி பல முதலாம் உலக நாடுகளையே முடக்கிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நபர் யார் அவர் என்ன செய்கிறார் என்ற விடயத்தை பலரும் மறந்திருப்பர்.  இதற்கு நாம் கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் திகதியை நோக்கி பின் செல்ல வேண்டும். 

அன்றைய தினம் சீனாவின் வுபெய் மாகாணத்தின் வுஹான் நகரின் ஜின்யின்டன் பொது வைத்தியசாலையில் 55 வயது நபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுதலில் சிரம் இருந்ததோடு கடும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது.  சாதாரண மருந்துகளுக்கு இது கட்டுப்படாமலிருந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

ஆரம்பத்தில் இது நிமோனியா அல்லது சார்ஸ் வைரஸுக்குறிய நோய் அறிகுறிகள் என்றே வைத்தியர்கள் கணித்தனர். 

அதன் பிறகு 15 ஆம் திகதி இதே நோய் அறிகுறிகளுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் நிமோனியாவுக்கான சிகிச்சை போதுமானதாக இருக்கவில்லை. சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர்களுக்கு சந்தேகம் தோன்றியது. ஏன் ஒரே சமயத்தில் பலர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டிய அளவு நிமோனியாவை ஒத்த சுவாசக் கோளாறுடன் மர்ம காய்ச்சலோடு நோய் படுகிறார்கள். மருத்துவர்கள் திகைத்தனர். எதோ ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டது என டிசம்பர் 12 முதல் அறிவிப்பு வெளியிட்டனர். 

டிசம்பர் 20, 21, 22 மற்றும் 23 தேதிகளில் முறையே 5, 4, 3, 8 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்து சேர்ந்தனர். ஜனவரி ஒன்று வரை மொத்தம் 59 நோயாளிகளுக்கு இந்த மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. 

தொண்டைக் குழி, மூக்கு மற்றும் நுரையீரலில் உள்ள  திரவத்தை எடுத்து பரிசோதனை செய்து பார்த்தனர் வைத்தியர்கள்  ஏற்கனவே கண்டு  பிடிக்கப்பட்ட எந்த வித நோய் கிருமியும் இல்லை. சில ஆண்டுகள் முன்னர் இதுபோல தான் சார்ஸ் என்ற சுவாச கோளாறு நோய் அதுவரை அறியப்படாத சார்ஸ் வகை கரோனா வைரஸால் ஏற்பட்டு தொற்று நோய் உருவாகியது.

புதிய தொற்றுநோய் தோன்றி இருக்கலாம் என்ற கருத்து டிசம்பர் 21 மெல்ல மெல்ல வலுப்பெறத் துவங்கியது. உலக  சுகாதார அமைப்புக்கு  (WHO)  டிசம்பர் 31 ஆம் தேதி சீன அரசு அதிகார பூர்வமாக இனம் காணப்படாத புதிய தொற்று ஏற்பட்டுள்ளது என்ற அறிவிப்பை அளித்தது. அதுவரை இந்த நோயால் எந்த மரணமும் நிகழவில்லை. ஜனவரி 9, 2020 இந்த நோயால் ஏற்பட்ட முதல் மரணம் நிகழ்ந்தது.

முதல் நபர் விபரம் வௌியிடப்படவில்லை

ஆனால் அதற்குப்பிறகு தேடலை தொடங்கியது சீனா. டிசம்பர் 8 ஆம் திகதிக்கு முன்பு இதே நோய் அறிகுறிகளுடன் எவரும் எந்த வைத்தியசாலையிலாவது அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்களா என்ற தேடலில் டிசம்பர் 1 ஆம் திகதி வயோதிபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என்ற தகவல் கிடைத்தது. மருத்துவ நெறிமுறைகளுக்கு அமைய அவரது பெயர் விபரங்கள் இது வரை வௌியிடப்படவில்லை. ஆனால் அவரது நோய் பரவல் வரலாற்றை அறிந்த கொண்ட வைத்தியர்களுக்கு குழப்பமே மிஞ்சியது. அவர்  அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயால் அவதியுறுபவர்.  

அவருக்கும் வுஹானின் கடல் உணவு இறைச்சி சந்தைக்கும் தொடர்பே இல்லை. எனவே இறைச்சி சந்தையில் தான் விலங்கிடமிருந்து மனிதனுக்கு இந்த வைரஸ் முதன் முதலில் பரவியது என்ற கருத்து பொய்யானது. ஆகவே இந்த வைரஸ் முதன் முதலில் எங்கிருந்து பரவியது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.  ஆனால் கொரோனா வைரஸ் தொற்றானது மனிதர்களின் உடல் ஆரோக்கிய நிலைமை  அடிப்படையில் தான் வௌிப்படுகின்றதா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

அதாவது ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் போது அவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அவருக்கு பாதிப்பு இருக்காது, ஆனால் அவரிடமிருந்து பரவும் ஏனையோர் பாதிப்படைவர் ஏன் மரணத்தையும் தழுவுவர் என்ற அடிப்படையில் தற்போது தகவல்களை சேகரித்து வருகின்றனர். 

 உலகம் முழுவதும் பிரளயம் போல பரவியுள்ள  இந்த தொற்றுநோய் ஒரே ஒரு நபர் மூலம் ஏற்பட்டு இருக்குமா என்ற வியப்பு  எமக்கு  ஏற்படலாம்.

டைபாய்ட் காய்ச்சல் அவ்வாறே பரவியது. 1883 ஆம் ஆண்டு  அயர்லாந்திலிருந்து தனது பதினைந்தாம் வயதில் அமெரிக்காவுக்கு குடிபுகுந்தவர் தான் மேரி மலான். செல்வந்த குடும்பங்களில் சமையல் வேலை செய்து வந்தார். அவர் வேலை செய்த ஏழு குடும்பங்களிலும் டைபாய்ட்  நோய் பரவி  மொத்தம் ஐம்பது பேர் மரணம் அடைந்தனர். பின்னர் தான் மேரி மலான் மூலமே இந்த கிருமி பரவி அந்த குடும்பங்களில் மரணம் ஏற்பட்டது என தெரிய வந்தது. அவருக்கு கிருமி தொற்று இருந்தாலும் அவருக்கு டைபாய்ட் காய்ச்சல் இறுதி வரை ஏற்படவில்லை என்பது தான் ஆச்சரியம். 

எபோலா

அதே போன்று  மேற்கு ஆபிரிக்காவில் 28,616 பேரை தாக்கி 11,310 உயிர்களை குடித்த 2014ஆம் ஆண்டு எபோலா வைரஸ் தொற்றுநோய் பரவல் கினி குடியரசில்   இரண்டு வயது குழந்தையிடமிருந்து பரவியது  என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதுவரை மிக அரிதாக இருந்த எபோலா வைரஸ் மரபணு தொடரில் ஏற்பட்ட ஒற்றை மரபணுப் பிறழ்ச்சி காரணமாக (Mutation)  நான்கு மடங்கு தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தும் அதி பயங்கர கொள்ளை நோயாக மாறியது.

எனவே இந்த கொரோனா வைரஸ் உண்மையில் யாரிடமிருந்து பரவியது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.