மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா பயணித்த வாகனம் மாட்டுடன் மோதியதில் நீதிவான் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா தனது பாதுகாப்பு பொலிஸ் மற்றும் நீதிமன்ற ஊழியருடனும் சங்குப்பிட்டி மன்னார் வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மன்னார் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியில் குறுக்காக ஓடிய கட்டாக்காலி மாடுகளுடன் நீதிவானின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து, காயமடைந்த மூவரையும் இலுப்பைக்கடவை பொலிசார் உடனடியாக மன்னார் பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளததுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டனர்.

தலையில் காயத்துக்குள்ளான நீதிவான் தற்பொழுது மன்னார் வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளாகி வருவதாகவும் ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வீடு செல்லும் நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.