( ரி.விரூஷன் ) 

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவிகளுடன் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்துள்ளதாக யாழ் .மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெனிஸ்லெஸ் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியாக தகாத முறையில் ஈடுபட்டமை தொடர்பில் குறித்த ஆசிரியரை கைது செய்து சட்டநடவடிக்கையூடாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களும் பழைய மாணவர்களும் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். 

இந்நிலையிலேயே குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியரை கைதுசெய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படுகின்ற வேறு இரு ஆசிரியர்கள் மற்றும் சம்பவம் தொடர்பாக தெரியவந்திருந்த நிலையிலும் அது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்காது குறித்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட அதிபர் ஆகியோர் தொடர்பாக நீதிமன்றத்தின்  அழைப்பாணை ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கைது செய்யப்பட்டவர் தொடர்பாக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுவருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இது போன்றதொரு சம்பவம் யாழ்ப்பாணம் வரணி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்று அதனோடு தொடர்புடைய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.