அங்காரா, ( சின்ஹுவா ) புதிய கொரோனாவைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்துக்கு  மேலும் கூடுதலான உலக ஒத்துழைப்பு அவசியமாகிறது. அது உலகமயமாக்கத்துக்கு முடிவொன்றைக் கொண்டுவரப்போவதில்லை. உலகமயமாக்கம் மாற்றமுடியாத ஒரு செயன்முறையாகும் என்று இஸ்தான்புல் பல்கலைக்கழகமொன்றில் ஆசிய கற்கைகள் செயற்திட்டத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் கலாநிதி அல்ரே அட்லி கூறியிருக்கிறார்.

வைரஸ் பரவல் உலகளாவிய ஒரு தொற்றுநோயாக மாறிய பிறகு, உலகமயமாக்கலுக்கு முடிவுவரக்கூடிய சாத்தியம் தொடர்பாக மேற்குலக ஊடகங்களில்  கோட்பாடுகளும் வாதங்களும்  வலம்வருகின்றன என்று குறிப்பிட்ட அட்லி அந்த கருத்துகளுடன் தனக்கு  உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார்.

" உலகமயமாக்கல் மாற்றமுடியாத ஒரு செயன்முறை.... இந்த தொற்றுநோய்க்கு பிறகு உலகமயமாக்கல் முடிவொன்றுக்கு வந்துவிட்டடது ;  அதிகரிக்கும் தற்காப்புவாதத்துக்கு மத்தியில் சகலரும் கதவுகளை மூடவேண்டியிருக்கும் என்பதாக நினைத்துச் செயற்படுவது சாத்தியமில்லை. உலக ஒத்துழைப்பு  எந்தளவுக்கு உச்சபட்ச முக்கியத்துவம் கொண்டதென்பதையும்  சிறப்பான பொதுவான எதிர்காலம் ஒன்றுக்காக இதிலிருந்து மனிதகுலம்  படிப்பினைகளை பெற்றுக்கொள்வது அவசியம் என்பதையும் இந்த வைரஸ் எமக்கு காண்பித்துவிட்டது " என்று சீனாவின் உத்தியோகபூர்வ செய்திச்சேவை சின்ஹுவாவுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் கூறினார்.

வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகும்  உலகமயமாக்கல் தொடரும் என்று அழுத்திக்கூறிய அட்லி,  உலகமயமாக்கலை கூடுதலான அளவுக்கு ஒப்புரவும் ஒத்துழைப்பும் கொண்டதாக மாற்றுவதற்கு அதில் உள்ள குறைபாடுகளை அகற்றுவது அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.

சீனாவின் தொழில்துறை படிப்படியாக வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், ஆசியா உலகமயமாக்கத்தை பாதுகாத்து அதன் தொழில்நுட்ப மையங்களையும், விநியோக சங்கிலி தொடர்களையும் மேம்படுத்தும் என்று நம்பிக்கையுடன் கூறய அவர், தற்போதைய நெருக்கடியைக் கையாள ஒருங்கிணைந்து செயற்படுமாறு உலகம்பூராவுமுள்ள நாடுகளை வலியுறுத்திக்கேட்டுக்கொண்டார்.

கொவிட் - 19 தொற்றுநோய்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு தேசத்தினதும் ஈடுபாடு தேவைப்படுகிறது என்று கூறிய அவர், கொவிட் - 19 க்கு எதிராக நடத்துகின்ற உறுதியான போராட்டத்துக்காகவும் ஏனைய நாடுகளுக்கு உதவுகின்றமைக்காகவும் சீனாவைப் பாராட்டினார்.

நீண்ட கால அடிப்படையில , அடுத்த தொற்றுநோயைக் கண்டுபிடித்து அதற்கெதிராக போராடுவதற்கு கூடுதல் உறுதிவாய்ந்த உலக ஒத்துழைப்பு அவசியமாகும். கொரோனாவைரஸ் நாடுகளுக்கு அல்லது இனங்களுக்கு மத்தியில் வேறுபாடு பார்ப்பதில்லை. எமது கிரகத்தில் உள்ளஒவ்வொருவரையும் அது பாதிக்கிறது. அதன் காரணத்திலால்தான் நாமும் அதற்கெதிராக ஒன்றுபட்டு உலக மட்டத்தில் போராடவேண்டும் என்றும் ஆசிய விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவரான அட்லி நேர்காணலில் மேலும் குறிப்பிட்டார்.