கொவிட் - 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் முடக்கப்பட்டிருப்பதனால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கருத்துக் கூறியிருக்கும் பிரபல விஞ்ஞானி ஜி.மாதவன் நாயர் இந்தியா அரசியலும் மதமும் இல்லாமல் வாழக்கற்றுக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

" இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் இந்தப் போக்கு தொடரவேண்டும். சகல அரசியல் கட்சிகளும் அரசியல் நடவடிக்கைகளை பின்னணிக்கு தள்ளிவிடவேண்டும். ஒவ்வொருவரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கவனத்தைச் செலுத்தவேண்டும் " என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நாயர் பி.ரி.ஐ. செய்திச்சேவைக்கு கூறினார்.

கொவிட் பற்றி கருத்துக்கூறிய அவர் உண்மையில் இந்த வைரஸ்களில் பல பூமியில் செயலற்றுக்கிடக்கின்றன. சாதகமான சூழ்நிலைகள் வரும்போது அவை முனைப்புடன் வெளிக்கிளம்புகின்றன. கடந்த மூன்று நூற்றாண்டுகளையும் அதற்கு முன்னைய நூற்றாண்டுகளையும் நோக்குவோமேயானால், ஒவ்வொரு 100 வருடங்களுக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு வைரஸ் தொற்றுநோய் வெடித்துப் பரவியிருந்தததை அறியக்கூடியதாக இருக்கிறது. அதனால், இது ஒரு இயற்கையான தோற்றப்பாடாகும் என்று தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் பரவலை முறியடிப்பதற்கான போராட்டத்தில் சாதி, மத, அரசியல் வேறுபாடுமின்றி இந்தியர்கள் ஒன்றுபட்டு நின்று ஐக்கியத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள். தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதே அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்திய நாயர், பரவலை நிறுத்துவதை நோக்கி பல நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றன. நெருக்கடி நிலைவரம் வேண்டிநிற்பதற்கு பொருத்தமான முறையில் அதிகாரிகள் பெருமளவுக்கு சிறப்பாக தங்கள் பணிகளை செய்கிறார்கள். இதே உத்வேகம் தொடர்ந்து பேணப்படவேண்டும். மக்களுக்கு நிவாரண உதவிகளை கிடைக்கச்செய்வதில் இந்தியாவினால் இடைத்தரகர்களை விலக்கிவைக்கக் கூடியதாக இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

முன்னர் நிவாரண உதவிகளுக்கான நிதியெல்லாம் இடைத்தரகர்களுக்கு சுவறிப்போவது வழமையாக இருந்தது. அதனால் அந்த உதவிகள் சென்றடைய வேண்டிய மக்களால் பெருமளவுக்கு பயன்பெறமுடியாமல்போனது. அதனால், இடைத்தரகர்களை விலக்கிவைக்கும் இந்த நடைமுறை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுமானால், நிச்சயமாக நாட்டுக்கு நல்லது என்றும் நாயர் மேலும் கூறினார்.