- பேராசிரியர் மா.சே. மூக்கையா

கொ­விட் –19 தொற்று நோய் பற்றி கரிசனத்துடன் சிந்திப்பவர்கள் மத்தியில் இத்தாலி ஏன் இவ்வளவு கூடிய இறப்புகளை கொண்டிருக்கிறது என்ற வினா எழுவது சகஜமாகும். அந்நாட்டில் சடுதியாக ஓரிரு வாரங்களில் இவ்வாறு கூடியளவில் இறந்துள்ளமை அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.

அதற்காக இத்தாலி நம்பிக்கையை இழந்து விட வேண்டிய ஒரு நாடாக எவரும் சிந்திக்கவோ கவலைப்படவோ வேண்டியதில்லை. இத் தொற்று நோய் மிக மோசமான விளைவுகளை இன்று பல நாடுகளில் (200) ஏற்படுத்தியுள்ளமையினை அசட்டை செய்யவும் உதாசீனம் செய்யவும் முடியாது. 

ஆனால் அதற்காக அசந்து போய் விடவோ விரக்தியடைந்து விடவோ கூடாது. மிகமுக்கியமாக அரசாங்கங்கள் அவ்வவ்நாட்டு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற்றுதான் இன்றைய நிலைமையினை நிர்வாகம் செய்து வருகின்றன.

நடவடிக்கைகளை மூடுதல் (lock down), ஊரடங்கு சட்டம் என்பன அவற்றிலடங்குகின்றன. வரட்டு இருமல் , சளி காய்ச்சல் போன்ற எந்தவொரு அறிகுறியிருந்தாலும் மக்கள் வைத்திய ஆலோசனைப் பெற தாமதிக்க கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள். சமூக ரீதியாக ஒதுங்கியிருத்தல், கூட்டங் கூடக் கூடாது , கைகள் மற்றும் முகத்தினை அடிக்கடி சவர்க்களாரம் போன்றவற்றை பயன்படுத்தி கழுவுதல் என்பன மிக அத்தியாவசியமானவை என்று நிபுணர்களின் அறிவுரையின் படி மக்களிடம் கூறப்பட்டு வருகின்றது. 

ஆனால் இவையாவும் முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது வினாவாகும். அரசாங்கம் தொற்று நோய் பாதிப்புக்குள்ளான நாடுகளுடன் தொடர்புகளை குறிப்பாக விமான மற்றும் பயணிகளை எச்சரிக்கையுடன் கட்டுப்படுத்தல், ஒரு இடத்திலிருந்து ஏனைய இடங்களுக்கு மக்கள் சென்று வருவது என்பன கட்டுப்படுத்தப்படுத்தல் அவசியமானவை. ஒரு புறத்தில் இவற்றை இத்தாலி பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்தாவது முழுமையாக கடைப்பிடித்ததா என்பது பற்றி சரியாக தெரியவில்லை. 

மக்கள் தொகையின் குணாதிசயம்

ஆனாலும் மேற்கூறிய கட்டுப்பாட்டு காரணிகள் உதாசீனம் செய்யப்பட்டமை ஒரு புறமிருக்க இத்தாலி நாட்டின் மக்கள் தொகையின் ஒரு பிரதான குணாதிசயம் பெரிதும் குறிப்பிடத்தக்க கூடிய மரணங்களுக்கான ஒரு காரணமாகும். சராசரி இத்தாலியர்களது வாழும் காலம் உலகில் அதியுயர்ந்த நாடுகளில் ஒன்றாக காணப்படுகிறது. சராசரியாக 84 வருடங்கள் உயிர்வாழும் இத்தாலியர்களில் ஆண்கள் சராசரியாக 81 வருடங்களும் பெண்கள் 85.3 வருடங்களும் 2019 ஆம் ஆண்டில் வாழ்ந்துள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிபரவியல் ஆராய்ச்சி திணைக்களம் தகவல் கூறியுள்ளது.

பொதுவில் அந்நாட்டின் குடித்தொகையான 59.5 மில்லியன் மக்களில் (2019) 23 வீதமானோர் அல்லது 13.5 மில்லியன் பேர் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். வருடாந்தம் சராசரியாக மொத்தக் குடித்தொகையில் 1000 பேருக்கு 10.5 பேர் இறப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் ஏறத்தாழ ஆறு இலட்சம் பேர் (619,500) வருடாந்தம் முழு நாட்டிலும் இறக்கும் போது அதில் 23 வீதமான 141,750 பேர் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருந்துள்ளனர். 

இத்தாலியின் இன்றைய நிலவரம் (7.4.2020)

இத்தாலி ஏறத்தாழ 60 மில்லியன் மக்களைக் கொண்டு,  132,187 பேரை கொரோனா வைரஸின் அறிகுறி கொண்ட நாடாக உள்ளது. 93,187 பேர் நோயின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். 22,837 பேர் நோயிலிருந்து சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் 16,523 பேர் இறந்துள்ளனர் என்பது பெரும் வேதனைக்கும் கரிசனத்திற்கும் உரிய துயரமாகும்.

ஏற்கனவே கூறியுள்ள மாதாந்தம் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 11,812 பேர் இத்தாலியில் இறப்பதும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கூட்டாக 23,624 பேர் இறக்கும் நிலைமை அந்நாட்டில் வழக்கமாக உள்ளதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது குறுகிய காலத்தில் ஏற்பட்ட அழிவு என்பதன் காரணமாக அதிர்ச்சியை மேலதிகமாக ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிகிறது. 

ஏனைய நிலவரங்கள்

இத்தாலியின் வட பகுதி, மத்திய பகுதி, ரோம் மற்றும் அயல் பகுதிகள் பல உலக பிரசித்தி பெற்ற வரலாற்று ரீதியாக பழைமை வாய்ந்த நினைவுச் சின்னங்களைக் கொண்டனவாகும். மிலான், டியூரின் , வெனிஸ், ஜெனோவா, பீசா, ரோம், நேப்பிள்ஸ் மற்றும் பல தீவுகள் என்பன பெரிதும் பிரசித்தம் பெற்ற சுற்றுலா மையங்களாகும். ரோம் கத்தோலிக்க சமயத்தவரது அதியுயர் தலைமையகம் ஆகும். 

இவற்றில் அந்நாட்டின் வரலாறு, கலாசாரம், தேவாலயங்கள், சித்திரங்கள் சேகரிப்பு, கலை வண்ணம் செறிந்த சிற்பங்களும் சேதமடைந்ததும் பயன் பாட்டிலும்  உள்ளதுமான பொது கட்டிடங்கள் குறுகிய வீதிகளுடனான அழகிய குடியிருப்புக்கள், பீசா உட்பட்ட உணவு வகைகள், நவநாகரிக உடை வடிவமைப்பு யாவும் உலகில் பெருமளவிலான சுற்றுலாக்காரர்களை அந்நாட்டிற்று கவருவனாக உள்ளன. தவிர யப்பான், கொரியா, தாய்வான், ஹொங்கொங், சிங்கப்பூர், சீனா உட்பட பல கிழக்காசிய நாட்டு சுற்றுலாக்காரர்களை இலகுவில் அடையாளம் காணக்கூடியதாக பெரிய எண்ணிக்கையால் வந்து செல்கின்றனர்.

உலகின் பிரதான சுற்றுலா நாடு

2018 ஆம் ஆண்டு இத்தாலிக்கு 62.8 மில்லியன் சுற்றுலாக்காரர்கள் சென்று வந்துள்ளனர். அந்நாட்டின் மக்கள் தொகை 60 மில்லியன் என்பது இங்கே கவனத்திற்குரியதாகும். உலகில் 5 ஆவது பிரதான சுற்றுலாக்காரர்கள் சென்றுவரும் நாடாக கணிப்பிடப்பட்டுள்ளது. 

அழகிய கடற்கரைகள், மலைகள் என்பனவும் உலகின் மரபுரிமை மையங்களாக இனங்கண்டு அங்கீகரிக்கப்பட்ட மையங்களும் இத்தாலியை சிறந்த சுற்றுலா மையமாக்கியுள்ளமை வியப்பாகாது. வருடாந்தம் ஏறத்தாழ 35,000 ஐக்கிய அமெரிக்க டொலர் தலா வருமானம் கொண்ட நாட்டில் வருடாந்தம் 235 பில்லியன் யூரோ இத்துறையின் காரணமாக இத்தாலிக்கு கிட்டுகின்றது. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.3 வீதமாகும். 

மேற்கூறியவற்றிலிருந்து கொரோனா வைரஸ் பெருமளவு கொவிட் -19 பரவியுள்ள நாடுகளில் இருந்து குறிப்பாக கிழக்காசிய நாடுகளிலிருந்து இத்தாலி வந்த மற்றும் அந்நாடுகளுக்கு சென்று வந்த இத்தாலியர்களால் இத்தாலியில் பரவி இருக்கின்றது என்று பலரும் கூறுகின்றனர். 

குறுகிய காலத்தில் இத்தாலியில் ஏற்பட்டுள்ள இந்த கொவிட் -19 இறப்புக்கள் மனிதர்களைத் திகைப்படையச் செய்துள்ளன. ஆனால் இதனை 1918 ஆம் ஆண்டில் இத்தாலியில் ஸ்பானிஸ் காய்ச்சலினால் ஏற்பட்ட 466,000 இறப்புக்களுடன் ஒப்பிடுகையில் இதுவும் கடந்துபோய் இத்தாலியை மீண்டும் ஒரு வல்லமை மிக்க நாடாக்கிவிடும் என்று நம்ப முடியும்.