நாட்டில் கொரோனா அச்சம் தீவிரமடைந்து செல்லும் இக்காலகட்டங்களில், தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ளோர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு சென்றோரும் மேலும் இரண்டு வாரங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டுமென கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பி,  வெட்டிமராஜபுரா- பேருவளையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட 30 வயது நபரொருவருக்கு, ஆறு நாட்களின் பின்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.