மூன்று மருத்துவர்களும் 26 தாதிமார்களும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானதை தொடர்ந்து மும்பாயின் மருத்துவமனையொன்றை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

மும்பாயின் வொக்கார்ட் மருத்துவமனையே மூடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளையும் இரண்டு முறை பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களில் எவருக்கும் பாதிப்பில்லை என்பது உறுதியான பின்னரே மருத்துவமனை திறக்கப்படும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருத்துவமனையின் அவசரசேவை பிரிவு ஆகியவற்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மும்பாய் மருத்துவமனையில் வைரஸ் பரவியமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் மும்பாயுமொன்று என்பது குறிப்பிடத்தக்கது.