(செ.தேன்மொழி)

நுவரெலியா பகுதியில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை - நானுவோயா வீதியில் இன்று திங்கட்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்கிடமான சொகுசு ஜீப் ரகவாகனத்தை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போதே குறித்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத மதுபான போத்தல்களை சந்தேக நபர்கள் கம்பளை பகுதிக்கு எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கம்பளை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  இவர்களிடமிருந்து 100 மதுபான போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் அதிக விலைக்கு குறித்த மதுபான போத்தல்களை விநியோகிக்கும் நோக்கிலே சந்தேக நபர்கள் இவற்றை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.