(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல் படுத்தப்பட்டுள்ள  ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 17 நாட்களுக்குள் 14,966 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 3,751 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் மக்கள் தமது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு , கம்பஹா, களுத்துறை , கண்டி ,புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவிக்கும் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் ,சில பகுதிகள் முற்றகாக முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவை தவிர்ந்த ஏனையப்பகுதிகளுக்கு இன்று திங்கட்கிழமை காலை 6 மணியிலிருந்து 2 மணிவரை ஊரடங்கு தளர்க்கப்பட்டிருந்தது.

அதற்கமைய  இன்று காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரையான 6 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 86 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கம்பஹா, நீர்க்கொழும்பு, களனி, பாணந்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலே இவ்வாறான கைதுகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. 

அத்தோடு, இவர்களுக்கு ஒருபோதும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்படாது என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தார்.