இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் 109 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,067 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவே அந்நாட்டில் ஒருநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் மட்டும் புதிதாக 541 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 292 பேர் குணமடைந்துள்ளார்கள்.

இந்திய மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லி தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்று தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியதன் காரணமாக பலருக்கும் வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதுவே ஒட்டுமொத்த பாதிப்பு திடீரென உயர்வதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு-571, டெல்லி- 503, கேரளா-314 ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. 

தற்போது இந்தியாவில் 274 மாவட்டங்களில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.