மன்னார் மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று திங்கட்கிழமை காலை 6 மணியளவில் தளர்த்திக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள மக்கள் வழமைக்கு மாறாக இன்றைய தினம்(6) பொருட்களை கொள்வனவு செய்வதில் முந்தியடித்துக் கொண்டனர்.

பல் பொருள் விற்பனை நிலையங்களில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.மேலும் மன்னார் சந்தை பகுதியில் மக்கள் முந்தியடித்துக் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்தனர்.

குறிப்பாக மன்னார் புதிய பஸ் தரிப்பிட பகுதியில் தற்காலிகமாக மரக்கறிவிற்பனை இடம்பெற்று வந்தது. மக்கள் அலட்சியப் போக்குடன் சமூக இடை வெளியின்றி முகக்கவசம் அணியாமல் பொருட்களை கொள்வனவு செய்தனர்.

அவ்வாறு செயற்பட்டவர்களை பொலிஸார் எச்சரித்ததோடு, முகக்கவசத்தை அணியுமாறு வழியுறுத்தினர். மேலும் மன்னார் நகர் முழுவதும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள இராணுவத்தின் சோதனைச்சாவடியில் மன்னாரில் இருந்து வெளியில் செல்லும் மற்றும் மன்னாரிற்குள் வரும் மக்களின் அடையாள அட்டையினை இராணுவத்தினர் சோதனை செய்கின்றனர்.

வெளி மாவட்டத்தில் உள்ளவர்கள் மன்னாரிற்குள் வருவதை கட்டுப்படுத்த குறித்த நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை மீறிய 105 பேர் இது வரையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இது வரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 11 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.