(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம் சடலங்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்வது தொடர்பாக ஆராய குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜனாதிபதியின் சட்ட ஆலாேசகருமான அலி சம்பரி தெரிவித்தார்.


கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்காமல், நல்லடக்கம் செய்வது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய திணைக்களம் மற்றும் சிவில் அமைப்பினர் இணைந்து ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க ஆகியோருடன் கலந்துரையாடினோம்.

அதன் பயனாக உலக சுகாதார அமைப்பின் பிரகடனத்தின் பிரகாரம் கொராேனா நோய்க்கு பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் முடியும் என்ற அடிப்படையில் முஸ்லிம் ஒருவர் இறந்தால் அவரின் உடலை புதைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

என்றாலும் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டு முதலாவதாக இறந்த முஸ்லிம் நபர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். அவரின் சடலத்தை நீர்கொழும்பில் நல்லடக்கம் செய்வதற்கு, அரசாங்கத்தின் நிபந்தனைக்கமைய அங்கு குழி தோண்டப்பட்டபோது, நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

அதனால் குறித்த சடலத்தை அந்த இடத்தில் புதைப்பதால் எதிர்காலத்தில் நீரில் நோய் கிருமிகளின் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டதால், சடலத்தை புதைக்காமல் எரிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஏனெனில் நீரில் நோய் கிருமிகளின் பாதிப்பு ஏற்பட்டால் அது சமூகங்களுக்கிடையிலும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து கொராேனா நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களை புதைக்காமல் எரிப்பதென்ற தீர்மானம் கடந்த 31ஆம் திகதி எடுக்கப்பட்டது. 

தற்போதும் அந்த சட்டமே நடைமுறையில் இருக்கின்றது. என்றாலும் இந்த விடயத்தை அரசியலாக்காமல் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். தற்போது அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமும் குறித்த நோயினால் மரணிப்பவர்களின் உடலை எரிக்கவும் புதைக்கவும் முடியும் என தெரிவித்து எழுத்து மூலம் டாக்டர் அனில் ஜாசிங்கவுக்கு அறிவித்திருக்கின்றது. 

எனவே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என நாங்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளோம். அத்துடன் இதுதொடர்பாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து பார்ப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறும் கோரியிருக்கின்றோம். இந்த குழுவில் முஸ்லிம் வைத்தியர்களும் உள்ளடங்குவார்கள்.

அத்துடன் சடலத்தை எரிப்பதா, புதைப்பதா என நாங்கள் விவாதிப்பதைவிட எமது சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த நோய்க்கு ஆளாகாமல் இருக்க நாங்கள் எங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

இன்று நாட்டில் முடக்கப்பட்டிருக்கும் கிராமங்கள் அனைத்தும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களாகும். அதனால் கொராேனா நோயினை சாதாரணமாக கருதாமல் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படவேண்டும் என்றார்.