(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இன்று மாலை மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்துக்குள்  11 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.  இதில் நேற்று 8 பேரும், இன்று மட்டும் புதிதாக மூன்று தொற்றாளர்களும்  கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார  சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 11 தொற்றாளர்களில் தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி, கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்ட ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

 நேற்று, அவர் மத்துகம -  நவ துடுவ பகுதியில் வைத்து கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 குறித்த நபர் கடந்த  மார்ச் 10 ஆம் திகதி தென் கொரொயாவிலிருந்து நாட்டுக்கு வந்துள்ள நிலையில்,  கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் மார்ச்  24 ஆம் திகதி வீடு திரும்பியுள்ள நிலையிலேயே,நேற்று கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னர் வீடு திரும்பியதும் அவரை பார்வை இட வந்தவர்கள், அவ்வீட்டில் வசித்த அந்நபரின் தாய் மற்றும் உறவுக்கார யுவதி ஒருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 நேற்று கண்டறியப்பட்ட 8 தொற்றாளர்களில்  மூவர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டவர்களாவர்.  அவர்கள் சுவிஸ் மத போதகரின்  நிகழ்வில் கலந்து கொண்வர்கள் என சுகாதார அதிகாரிகள் கூறினர். ஏனையோர்  தெஹிவளை, புத்தளம், பண்டாரகம,  பேருவளை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். பேருவளையில் அடையாளம் காணப்பட்ட  பெண் கர்ப்பிணியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிரசவித்தவராவார்.

 இந்நிலையில் இன்று அடையாளம் காணப்பட்ட மூவரில் இருவர்  கண்டி - அக்குரணை பகுதியிலும் ஒருவர் புத்தளத்திலும் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

 இந்நிலையிலேயே இலங்கையில் இதுவரை 162 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 9 பேர் சிறுவர்களாவர்.  அவ்வாறு அடையாளம் காணப்பட்ட சிறுவர்களில் ஒரு வருடமும் 4 மாதங்களும்  நிறம்பிய குழந்தை ஒன்று இன்று  குணமடைந்து அங்கொடை  தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியது.

 அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் எந்த குழந்தைக்கோ, சிறுவர்களுக்கோ கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பாரதூரமாக இல்லை எனவும், அவர்களுக்கு அவர்களது தாய், தந்தை போன்றோரிடமிருந்தே வைரஸ் தொற்றியுள்ளதாகவும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையின் சிறுவர்கள் குறித்த விஷேட வைத்திய நிபுணர் மேனா கப்ரால் தெரிவித்தார்.

 இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 162 தொற்றாளர்களில் 5 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 27 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 130 பேர் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அங்கு பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 38 ஆகும். இதற்கு அடுத்தபடியாக புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும், களுத்துறையில் 25 பேரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் 11 பேர் ஆவர்.  இதற்கு  அடுத்தபடியாக யாழ். மாவட்டத்தில் 7 தொற்றாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6 தொற்றாளர்களும், இன்று மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

 இந்நிலையில் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, வட மேல் மாகாணத்தின் புத்தளம்,  மத்திய மாகாணத்தின் கண்டி, வடக்கின் யாழ். மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்து  உச்ச நிலையில் உள்ளதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

 இவ்வாறான பின்னணியில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் மட்டும் நாடளாவிய ரீதியில் 30 வைத்தியசாலைகளில் 273 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.