(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க  நாட்டை முற்று முழுதாக  முடக்கும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை எனவும், அவ்வாறு நாட்டை முடக்கப் போவதாக போலியான தகவல்களை சமூக வலைத் தளங்கள் ஊடாக பரப்பி வருவோரைக் கைது செய்ய  விஷேட விசாரணை ஒன்றினை இன்று முதல் சி.ஐ.டி. ஊடாக ஆரம்பித்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

 இது தொடர்பில் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன வீரகேசரிக்கு தகவல் தருகையில்,

' எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை நாட்டை முற்று முழுதாக முடக்கப் போவதாக  சமூக வலைத் தளங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. 

இக்காலப்பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படும் எனவும்  சட்டம் கடுமையாக அமுல் செய்யபப்டும் எனவும், உணவு விநியோகம் கூட தடை செய்யப்பட்டு பாதையில் வாகனம் ஒன்றுக்கேனும் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டாது என தகவல்கள் பரப்படுகின்றன.

 இது முற்று முழுதான பொய்யாகும். இலங்கையை முடக்குவது தொடர்பில் இதுவரை அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

 எனவே, இவ்வாறானபோலியான மக்களிடையே அச்சம், குழப்பத்தை ஏற்படுத்தும் தகவல்களை  பரப்புவோரை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்  விஷேட குழுவொன்றுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக இந்த தகவலை உருவாக்கி பதிவிட்டவர், அதனை பகிர்வோர் தொடர்பில் விசாரணையில் அவதானம் செலுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார்.