( விரூஷன் )

மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட  ஆசிரியரை கைதுசெய்யுமாறு கோரி யாழ்.    காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பெரியபுலம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று புதன்கிழமை காலைபாடசாலைக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவிகள் மீது ஆசிரியர் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், அவர் அதனை மூடி மறைக்க முயன்றதாக பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.

 

இது தொடர்பில் பாடசாலை அதிபருடன் நேற்று பெற்றோர்கள் கலந்துரையாடியயோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்றும், சம்பவத்தை மூடி மறைத்த அதிபரை பதவிநீக்கம் செய்யவேண்டுமெனவும் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலையில் பழையமாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் மாணவர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், யாழ்ப்பாண பொலிஸாரால் கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் தண்ணீர்பீச்சியடிக்கும் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் மேலும் வலுப்பெற்றதையடுத்து சம்பவ இடத்திற்கு யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வருகை தந்து மாணவர்களுடன் பேச்சுவார்ததையிலீடுபட்டு குறித்த ஆசிரியரை கைதுசெய்யவதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களும் பாடசாலைக்கு வருகைதரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.