கொரோனாவும் உளவியல் தாக்கமும் !

04 Apr, 2020 | 02:13 PM
image

( பி.மாணிக்கவாசகம் )

கொரோனா வைரஸ் மனித குலத்தை வேரறுத்துக் கொண்டிருக்கின்றது. அதேநேரம் மனித வாழ்க்கைக்கு ஆதாரமாகிய பொருளாதாரத்தையும் அது மோசமாகத் தாக்கியுள்ளது. அனைத்து மனித வாழ்வியல் செயற்பாடுகளையும் ஒரு ஸ்தம்பித நிலைமைக்குக் கொண்டு வந்து, தன்னை அந்த நோய் தொற்றிப் பரவாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மனிதனைத் தற்காப்பு நிலைமைக்குள் வலிந்து தள்ளியுள்ளது.

இதற்காக தனித்திருத்தலையும் தனிமைப்பட்டிருத்தலையும் அரசுகளும் சுகாதாரத்துறையினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க வேண்டிய கட்டாய நிலைமை உருவாகியுள்ளது. சில நாடுகளில் அரச உத்தரவை மீறி வீதிகளில் நடமாடுபவர்களைக் காவல் துறையினர் கடுமையாகக் கண்காணித்து தண்டித்து வருகின்றார்கள்.

இலங்கையில் வீடுகளில் முடங்கி இருப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊடரங்கு உத்தரவை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. உத்தரவை மீறி வீதிகளில் தேவையற்ற வகையில் நடமாடுபவர்களைச் சுட்டுக்கொல்லுமாறு பிலிப்பைன்ஸ் அரசு தனது நாட்டுப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது காவல்துறையினரால் தடியடிப் பிரயோகம் செய்யப்படுகின்றது. தோப்புக்கரணம் போடச் செய்தும் தவளையைப் போன்று பாய்ந்து பாய்ந்து செல்ல வேண்டும் என்றும் பல்வேறு விதமான சிறு தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் முகநூலில் வைரலாகி உள்ளன.

ஒரு வீடியோ காட்சியில் மோட்டார் சைக்களில் வந்த இருவரை கொரோன வைரஸ் வடிவ தலைக்கவசம் அணிந்த இருவர் பற்றிப் பிடித்துக் கொள்கின்றனர். அதேநேரம் ஒருவர் சங்கு ஊதுகின்றார். மற்றுமொருவர் சேகண்டி மணி அடிக்கின்றார். வீதிகளில் நடமாடினால் கொரோனா வைரஸ் தொற்றி, நோய்க்கு உள்ளாகி மரணத்தைத் தழுவ நேரிடும் என்பதை இவ்வாறு காவல்துறையினர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த முற்பட்டுள்ளனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்டிருக்கின்றார்கள்.  

தும்மல் இருமல் என்பவற்றினால் ஒருவரிடம் இருந்து வெளிப்படுகின்ற ஈரத்துளிகள் மட்டுமல்லாமல் தொடுகையின் மூலமாகவும் கொரோனா வைரஸ் மனிதர்களிடம் தொற்றிப் பரவுகின்றது என்பதை எல்லோரும் அறிவர். இத்தகைய நோய்த்தொற்றும் தன்மையை விசேட அம்சமாகக் கொண்டுள்ள கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கொள்வதற்காகவே தனிமைப்பட்டிருத்தல் முறை கடைப்பிடிக்கப்படுகின்றது என்பதும் தெரிந்த விடயங்களே.

இருப்பினும் அரச மருத்துவர் சங்கத்தினர் கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையின் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று நிலைமை மோசமான கட்டத்திற்கு வந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்த நோய்த்தொற்றிப் பரவுகின்ற முறை குறித்து வகைப்படுத்தியுள்ளதற்கமைய இலங்கை 3 ஆம் கட்டத்தை அடைந்துள்ளது.

தனிமனிதத் தொற்று நிலைமையில் இருந்து மோசமடைந்து குடும்பங்களில் தொற்றிப் பரவுகின்ற நிலைமைக்கு கொரோனா வைரஸ் நோய் நிலைமை வந்துள்ளது என்பதே இதன் உட்பொருள். கொரோனா தொற்றிப் பரவுவதைத் தடுப்பதற்காகப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் நடமாடக் கூடாது என்ற ஊரடங்கு ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றார்கள். நோய்த்தொற்று ஆபத்து உள்ளவர்களையும் அத்தகைய சந்தேகத்திற்கு உட்பட்டவர்களையும் அதற்கென நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் அரசு தனிமைப்படுத்தி வைத்து கண்காணித்து வருகின்றது.

கொரோனா வைரஸ் என்பது உள்நாட்டில் உருவாகியதல்ல. சீனாவில் உருவாகி உலகமெங்கும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் தொற்றிப் பரவியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவேதான் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களை விமான நிலையங்களில் இருந்து நேரடியாக இத்தகைய தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அதிகாரிகள் பிரத்தியேக வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துக் கண்காணித்து வந்தனர், கண்காணித்து வருகின்றனர்.

அதேநேரம் அரச அதிகாரிகளுக்கும் சுகாதாரத்துறையினருக்கும் தெரியாத வகையில் வெளிநாடுகளில் இருந்து வந்து தமது குடும்பங்களிலும் சமூகப் பொதுவெளியிலும் தொடர்புகளை மேற்கொண்டிருந்தவர்களில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களையும் அவர்கள் தொடர்பு கொண்டிருந்தவர்களையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

ஆனால் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள் குறிப்பாக கொரோனா வைரஸை அதனுடைய உறங்கு நிலை பருவத்திலும் அதனைக் கடந்த நிலையிலும் தங்கள் உடல்களில் கொண்டிருப்பவர்கள் இன்னும் சமூகத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி நடமாடுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்.

கொரோனா வைரஸின் உறங்கு நிலை காலம் கடந்து நோயரும்பும் காலகட்டத்தில் இலங்கை வந்திருப்பதனால், நோய்த் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் பலர் சமூகத்தில் கண்டறியப்படலாம் என்று அஞ்சப்படுகின்றது. கொரோனா வைரஸ் இவர்களில் தொற்றி இருப்பது அவர்களுக்கும் தெரியாது. அதிகாரிகளுக்கும் தெரியாது. இப்போது அவர்களிடம் கொரோன வைரஸ் நோய் அரும்பி வெளிப்படுகின்ற தருணமாக இருப்பதன் காரணமாகவே இந்த வைரஸ் குடும்ப நிலையில் தொற்றிப் பரவுகின்ற நிலைமையின் ஆபத்து குறித்து அரச மருத்தவர் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே எச்சரித்துள்ளார்.

இந்த நிலைமையானது, ஊரடங்கு உத்தரவின்போது அடங்கி ஒடுங்கியிருக்கின்ற மக்கள் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் வீதிகளிலும் கடைத் தெருக்களிலும் சந்தைகள், பொது இடங்களிலும் மக்களோடு நெருக்கமாக நடமாடுவதன் மூலம் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்களினால் ஏனையோருக்கு கொரோனா வைரஸ் இலகுவாகத் தொற்றிப் பரவுவதற்கு ஏதுவாகி விடுகின்றது.

வீடுகளில் தனித்திருந்துவிட்டு, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் வெளியில் சென்று மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பதைத் தவிர்த்து, நெருங்கி முண்டியடிப்பதன் மூலம் கொரோன வைரஸை வாங்கிக் கொண்டு வருபவர்கள் தமது குடும்பங்களில் உள்ளவர்களுக்கு இலகுவாக அதனைத் தாங்கள் அறியாமலேயே தொற்றிப் பரவச் செய்து விடுகின்றார்கள்.

இத்தகைய ஒரு நிலைமையில்தான் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் எண்ணிக்கையானவர்களைத் திடீரென்று தொற்றிப் பரவியதாக மருத்துவ கண்காணிப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தகைய ஒரு நிலைமைதான் நூற்றுக்கணக்கானவர்கள் இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரே நாளில் உயிரிழக்க நேரிட்டிருக்கின்றது.

அரச மருத்துவர் சங்கத்தின் ஆபத்தான கட்டம் குறித்த எச்சரிக்கையானது, இத்தகைய நிலைமைகள் உருவாகக் கூடும் என்பதையே முன்னோட்டமாக் குறிப்பிடுகின்றது. ஆகவே பொதுமக்கள் இந்நிலைமையில் மிக மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை அரச மருத்துவர் சங்கம் அறிவுறுத்துகின்றது.

இந்த ஆபத்தான நிலைமையில் நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் அவதானமாகச் செயற்படத் தவறினால் இலங்கையும் கொரோனா வைரஸின் கோரப்பசிக்கு எண்ணற்றவர்களைப் பலிகொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நிலைமை ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையும், சுகாதாரத்துறையினருடைய வழிகாட்டல்களையும் சிரமேற்கொண்டு வீடுகளில் முடங்கியிருப்பவர்கள் வேறு விதமான பாதிப்புகளுக்கு ஆளாகின்ற நிலைமை குறித்து உலக சுகாதார நிறுவனமும், உளவியல் துறைசார்ந்த நிறுவனங்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீடுகளில் முடங்கியிருப்பவர்கள் இயல்பான வாழ்வியல் நடவடிக்கைகளிலும் செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது. சும்மா இருப்பதற்கே நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் பலர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களளவில் தனிப்பட்ட முறையிலும் குடும்ப ரீதியிலும் பயனளிக்கின்ற செயற்பாடுகளில் தமது நேரத்தைச் செலவிடுகின்றார்கள்.

குறிப்பாக விவசாயிகள் மற்றும் தனித்து சுயதொழில் செய்பவர்களே இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.

அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிலைகளில் தொழில் செய்பவர்களும், நகர்ப்புறங்களில் வாழ்கின்றவர்களும் இந்தத் தனிமைப்படுத்தலின் மூலம் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாக உளவள நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இது குறித்து உலக சுகாதார நிறுவனமும் மிக முக்கியமான விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது.  

வீடுகளில் முடங்கியிருத்தல் அல்லது தனிமைப்பட்டிருத்தல் என்பது குறிப்பாக வயோதிபர்களைப் பாதிக்கக் கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வீடுகளில் உள்ளவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை பொழுது போக்காகக் கொண்டிருக்கின்றார்கள்.  விசேடமாக பலரும் கைத்தொலைபேசிகளில் வலம் வருகின்ற வைபர் குறூப், வட்ஸ் அப் குறூப் என்பவற்றின் ஊடாக நிமிடத்திற்கு நிமிடம் கொரோன வைரஸ் பற்றி பரப்பப்படுகின்ற செய்தித் தகவல்கள், செய்தித் துணுக்குகள் என்பவற்றைப் பார்வையிடுவதிலேயே பொழுதைக் கழிக்கின்றார்கள்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொடர்பிலான மருத்துவ மற்றும் சுகாதார நிலை சார்ந்த அறிவுரைகள், எச்சரிக்கைகள் என்பவற்றையும் தொடர்ச்சியாகப் பார்வையிடுகின்றார்கள். இதைவிட முகநூல் பயன்பாடும், அதனைப் பார்வையிடுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாக இணையப்பயன்பாட்டியலாளர்களும் அவதானிப்பாளர்களும் குறிப்பிடுகின்றார்கள்.

வைபர் குறூப், வட்ஸ் அப் குறூப் என்பவற்றிலும், தமது முகநூலிலும் தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுபவர்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாகவே கருதுகின்றார்கள். அவ்வாறு செயற்படுவது கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக எழுந்துள்ள நெருக்கடியான கால கட்டத்தில் அவசியமானது. முக்கியமான சமூக சேவை என்றும் கருதுகின்றார்கள்.

இந்த சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்கள் அனைவருமே உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுவதில்லை. தங்களை சமூக ஊடகவியலாளர்களாக குடிமக்கள் ஊடகவியலளார்களாகக் கற்பிதம் செய்து கொண்டு தாங்கள் கேள்விப்படுகின்ற தகவல்களையும் அரைகுறையாக அறிகின்ற விடயங்களையும் செய்திகளாக அல்லது செய்தி வடிவம் கொண்ட தகவல்களாக வெளிப்படுத்துகின்றார்கள்.

இதில் முக்கியமாகத் தொழில்திறன் சார்ந்த ஊடகவியலாளர்களைப் போன்று தங்களுக்குக் கிடைக்கின்ற செய்திகளை சக ஊடகவியலாளர்களையும், சக ஊடக நிறுவனங்களையும் முந்திக் கொண்டு வெளியிட்டுவிட வேண்டும் என்ற தொழில்முறைப் போட்டி மன நிலையில் இருந்து இந்த சமூக வலைத்தள ஊடகர்கள் செயற்படுகின்றார்கள்.

இதனால் போலிச் செய்தி, பொய்யான தகவல்கள், ஆதாரமற்ற விடயங்கள், விபரீதமான விடயங்கள் என்பன சமூகத்தை விரைவாகவும் பரவலாகவும் சென்றடைகின்றன. இவ்வாறு செயற்படுகின்ற சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்கள், பிந்திய செய்திகளுக்கும் பிந்திய நிலைமைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும் தங்கள் தளங்களில் அல்லது குறூப்களில் பொதுமக்களைத் தொடர்ந்து தங்களுடன் இணைந்திருக்கச் செய்து விடுகின்றார்கள்.

இது ஆபத்தான நிலைமைகளை உருவாக்கி வருகின்றது என்பது உளவியலாளர்கள் மருத்துவ நிபுணர்களின் கருத்து. தவறான தகவல்களை செய்திகளாக வெளியிடும்போது, மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றார்கள். சமூகம் தவறான முறையில் உணர்வுகளுக்கும் கொந்தளிக்கின்ற மன நிலைமைக்கும் ஆளாக்கப்படுகின்றார்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள முக்கியமான இந்து ஆலயங்கள் சேதமுற்றதாகப் பரப்பப்பட்ட போலிச் செய்தி அல்லது வதந்தி காரணமாக இந்துக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் கொரோன வைரஸின் பேரிடர் காலத்தில் தெய்வக்குற்ற நிலைமை அல்லது தெய்வ நிந்தனையின் பாதிப்பு வடிவிலான பேரிடர் நிகழப் போகின்றது என்று எண்ணி அச்சம் கொண்டார்கள். அவர்கள் கொண்டிருந்த அச்ச உணர்வு ஒரு சில மணித்தியலாங்களில் உச்சத்தை எட்டியிருந்தது என்பது கவலைக்குரியது.

மறுபுறத்தில் கொரோனா வைரஸின் பேரிடர் நிலைமை குறித்த செய்திகளையும் தகவல்களையும் தொடர்ச்சியாகப் பார்வையிட்டு, அந்தத் துன்ப நிலைமைகள் கஸ்ட நிலைமைகள் குறித்த சிந்தனை வயப்பட்டிருப்பவர்கள் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகின்றார்கள்.

அவர்களுடைய மனங்களில் அந்த இடர் நிலைமை குறித்த சிந்தனையே தொடர்ந்து இருப்பதனால் அவர்களுடைய உள்ளங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் வரப்போகின்ற பாதிப்புகளுக்காகவும் பரிதவிக்கின்றது. பச்சாத்தாபம் கொள்கின்றது. பதற்றம் ஏற்படுகின்றது. இதனால் தங்களை அறியாத வகையில் அவர்கள் மறைநிலை அச்ச உணர்வுக்கு ஆளாகின்றார்கள். அச்சமும் பரிதவிப்பும், அடுத்த கட்டம் பற்றிய கவலையும், அக்கறையும் பதற்றமும் அவர்களை மன அழுத்தத்திற்கும் உளவியல் ரீதியான பாதிப்புக்கும் உள்ளாக்கி விடுகின்றது.

உளவியல் பாதிப்பு காரணமாக அவர்கள் உடல் ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றார்கள். இது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கிவிடுகின்றது. தலையிடி, தூக்கமின்மை, பதற்றம் காரணமாக இதயத்துடிப்பு அதிகமாதல், அஜீரணம், வயிற்று நோ என்பவற்றுடன் அவர்கள் உயர் குருதி அழுத்தத்திற்கும் ஆளாகின்றார்கள்.

சிறுநீரக நோய், உயர் குருதி அழுத்தம், இதயக் கோளாறு, வயிற்றுக் கோளாறு போன்ற நோய்களுடனும் புற்றுநோய் உள்ளிட்ட மோசமான நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியவர்களும் கொரோனா வைரஸ் நோய் குறித்து அதிகமாக சிந்திப்பதனாலும் அதுபற்றிய தகவல்களிலேயே தொடர்ச்சியாக ஆழ்ந்து கிடப்பதனாலும் அவர்களுடைய உடல் ஆரோக்கிய நிலைமை மோசமடைகின்றது. அவர்களை ஏற்கனவே பாதித்துள்ள நோய்கள் மேலும் மோசமடையவும் நேரிடுகின்றது.

இதனால், கொரோனா வைரஸ் இவர்களிடம் தொற்றிப் பரவாமலே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி அவர்களின் ஆரோக்கிய நிலைமைக்குக் கேடு விளைவிக்கின்றது. இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளை குறிப்பிட்ட நேரம் மாத்திரம் ஒரு நாளில் இரண்டு தடவைகள் அறிந்தால் போதும் என்று மருத்துவ நிபுணர்களும், சுகாதாரத்துறை நிபுணர்களும் அறிவுறுத்தி உள்ளார்கள்.

சாதாரணமாகவே கொரோனா வைரஸ் நோய்த்தாக்கமானது பலரையும் அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், கவலையடையவும் அடுத்த கட்டம் என்னவாகப் போகின்றது என்று சிந்திக்கவும் தூண்டி இருக்கின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள், தகவல்கள், அது பற்றிய உறுதிப்படுத்தப்படாத வகையில் பல்கிப் பரவிக் கொண்டிருக்கின்ற ஆதாரமற்ற விடயங்கள் என்பவற்றில் ஆழ்ந்திருப்பவர்கள் மோசமான நிலைமைக்கே ஆளாவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எனவேதான், வீடுகளில் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து கூடிய அளவில் ஒத்துழைத்து குதூகலமாக இருக்குமாறு மருத்தவர்கள் கூறுகின்றார்கள். அதேவேளை, வீட்டுத்தோட்டச் செய்கை, செய்யப்படாமல் காலம் கடந்து தேங்கிக் கிடக்கின்ற வேலைகள் என்பவற்றைத் திட்டமிட்ட வகையில் குடும்ப அங்கத்தினர்களுடன் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.

குடும்பமாக ஒன்றிணைந்து செயற்படும்போதும், குடும்பத்திற்கான பணிகளை முன்னெடுக்கும்போதும் மனக்கவலைகள் மறைந்து ஆத்ம திருப்தியும் குடும்ப உறவினர்கள் மீதூன பற்றும் அக்கறையும் மேலோங்கி அன்புப் பிணைப்பும் இறுக்கமடைகின்றது என்று அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

அதேவேளை, தங்களின் உறவினர்கள், நண்பர்களில் கிரமமாகவும் சுறுசுறுப்பாகவும் பணியாற்றிவிட்டு திடீரென ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் முடங்கி இருக்க நேர்ந்துள்ள வயதானவர்கள், தொற்றா நோய்களுக்கு ஆளாகியிருப்பவர்களுடன் அடிக்கடி தொலைபேசி மூலமாக உரையாடி அவர்களை உளவியல் ரீதியாக உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். தொலைவில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் வீடுகளில் உள்ள பெரியவர்களுடனும் அளவாளவி அவர்களுடைய மன நிலையை உற்சாகமாக வைத்துக் கொள்வது அவசியம் என்பதையும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

எது எப்படி இருப்பினும் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் உருவாகியுள்ள நெருக்கடியான நிலைமைகளில் அரசும் அதிகாரிகளும் அறிவுறுத்தியிருப்பதற்கு அமைய அனைத்து குடிமக்களும் செயற்பட்டு ஒத்துழைக்க வேண்டும். இது காலத்தின் அவசியம். கட்டாயத் தேவையும்கூட.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48