கொரோனா வைரஸ்  தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் அரசின் நடவடிக்கையின் அமைவாக கிளிநொச்சி இரணைமடு விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 172 யாத்திரீகர்கள் இன்றைய தினம் (04-04-2020) அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை இரணைமடு விமானப்படை முகாமில்  விமானப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்தியாவுக்கு யாத்திரீகர்களாக சென்று நாடு திரும்பிய 171 பேரும், அபுதாயிலிருந்து நாடு திரும்பிய ஒருவருமாக 172 கடந்த 21-03-2020 இரணைமடு விமானப் படை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 

இவர்களில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 127 பெண்களும், 45 ஆண்களும் ஆவர். 

இவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற நிலையில் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

நாட்டின் பல பாகங்களிலும் 41  பொலிஸ் நிலைய பிரிவுகளைச் சேர்ந்த இவர்கள்  ஏழு விசேட பேரூந்துகளில்  விமானப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தாங்கள் இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டமை தொடர்பில் எவ்வித மனவருத்தமோ கவலையோ இல்லை எனவும், நாட்டையும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு கருதி அரசின் இந்நடவடிக்கையினை நாம் முழுமனதோடு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த பொது மக்கள்  தனிமைப்படுத்தலை கௌரவ குறைவாகவோ, அல்லது குற்ற உணர்ச்சியோடு நோக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களை விமானப்படையினர் மிகவும் அக்கறையோடு  பாராமரித்தார்கள், அவர்களுக்கு தாங்கள் மிகுந்த நன்றியை தெரிவிப்பதாகவும் இந்த மக்கள் தெரிவித்தனர்.