சமூகங்களின் மையத்தை தாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கச்செய்த கொரோனா !

04 Apr, 2020 | 12:16 PM
image

 (துரைசாமி நடராஜா)

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவால் உலகம் ஆட்டம்கண்டு வருகின்ற நிலையில் பின்தங்கிய மக்கள் பாரிய சவால்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். உணவுத்தேவை உள்ளிட்ட இன்னும் பல சிக்கல்களும்  இதில் உள்ளடங்குகின்றன. இந்நிலைமையானது மேலும் பல சமூகப் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும் அபாயம் காணப்படுவதாக  புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பின்தங்கிய மக்கள் வரிசையில் இங்கு வாழும் மலையக மக்களும் உள்ளடக்கம். இவர்களுக்கும் இது பொருந்துவதாகவே அமைகின்றது.   

கொரோனா மனித குலத்தின் மிகப்பெரும் எதிரியாக இப்போது உருவெடுத்திருக்கின்றது. அப்பாவி மனித உயிர்களை காவுகொள்ளும் கொரோனா உலக மக்களின் பொது எதிரியாக உள்ளது. இதனை வேரறுப்பதற்கு அரசாங்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி ஒவ்வொருவரும் உச்சகட்ட ஒத்துழைப்பினை வழங்குதல் வேண்டும். கொரோனா ஐரோப்பிய நாடுகளில் அதிகளவு உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் அமெரிக்காவின் நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றன.

கொரோனாவின் தாக்கத்தினால் அமெரிக்கா சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வருமென்றும்  எதிர்வரும் இரண்டு வாரங்கள் அமெரிக்கவை பொறுத்த வரையில் மிகவும் சோகம்  நிறைந்ததாக காணப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தமை அனைவரையும் கண் கலங்க வைப்பதாக உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப்பினனர் பாரிய சவாலாக கொரோனா வைரஸ் உருவெடுத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தெரிவித்திருக்கின்றார். கொரோனா வைரஸ் சமூக பொருளாதார ரீதியில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றது என்பது குறித்த ஐ.நா.வின் அறிக்கை அண்மையில் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையிலேயே ஐ.நா.வின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.சமூகங்களின் மையத்தை தாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை கொரோனா பாதித்திருக்கின்றது. ஐ.நா. ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக கொரோனா வைரஸ் தாக்கம் அமைந்துள்ளது. கொரோனாவை வெற்றிகொள்ள ஒருங்கிணைந்த சுகாதார நடவடிக்கைகள் அவசியம் என்று பல விடயங்களையும் ஐ.நா.வின் அறிக்கை மேலும் வலியுறுத்தி இருக்கின்றது.

பாதுகாப்பு தொடர்பில் இதுகாலவரை நாம் பாதுகாப்புப் படையினரை மையப்படுத்தி பேசி வந்துள்ளோம்.எனினும்  இனிமேல் நாம் பாதுகாப்பு  குறித்து பேசுகின்றபோது வைத்தியர்களையும் சுகாதார ஊழியர்களையும் பற்றி அதிகமாகவே சிந்திக்க வேண்டிய ஒரு தேவையினை கொரோனா ஏற்படுத்தி இருக்கின்றது. நாட்டின் வரவு செலவு திட்டத்தில் சுகாதார துறைக்கென்று கூடுதலான தொகையினை ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையும் கொரோனாவால் ஏற்பட்டிருக்கின்றது.

மேலும் மருத்துவத்துறை என்பது இதுகாலவரை மேல்மட்டத்தினரின் ஒரு தொழிலாக இருந்து வந்துள்ளது. இந்த நிலை மாற்றப்பட்டு மருத்துவத்துறை என்பது சமூகமயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை பேராசிரியர் சோ.சந்திரசேகரன் வலியுறுத்துகின்றார். இதனால் மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பு அதிகரிக்குமென்றும் இதன்மூலம் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை மக்கள் இலகுவாக பின்பற்றும் நிலை உருவாகுமென்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றமையும் நோக்கத்தக்கதாக உள்ளது.

கொரோனா  அரசியல் சமூக பொருளாதார ரீதியில் பல்வேறு தாக்க விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது.கொரோனாவின் தாக்கம் காரணமாக ஆசிய பசுபிக் நாடுகளுக்கு கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று உலக வங்கி சுட்டிக்காட்டி இருக்கின்றது கொரோனாவால் கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்புக்களை இழந்துள்ளனர்.கொரோனா அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு குரல் கொடுக்கச் செய்திருப்பது ஒரு சிறப்பம்சமாக கருதப்படுகின்றது.

 பாடசாலைக்கல்வி சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் நிலைமைகளும் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளன.இணையவழிக்கல்விக்கும் சுய கற்றலுக்கும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.ஆசிரியர்களின் நேரடிக்கல்வி வழங்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.கற்பித்தல் முறைகள் மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.

அரசாங்கத்தின் ஆளுமை

உலக நாடுகள் பலவும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.கொரோனா வைரஸ் பரவுவதனை தடுத்தல், தொற்றுக்குள்ளானவர்களை பாதுகாத்தல் ஏன்ற ரீதியிலா வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவுஸ்திரேலியா தனது எல்லைகளை  குறிப்பிட்ட காலத்திற்கு மூடி இருக்கின்றது. எனினும்  பல நாடுகள் இவ்விடயத்தில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக பல நாடுகள் உரியவாறு வைத்திய வசதிகளை வழங்க முடியாமல் திக்குமுக்காடிப் போயுள்ளன.இதனால். வைரஸ் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையும், தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றது.

எவ்வாறெனினும் இலங்கை கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் விடயத்தில் கூடுதலான சிரத்தையுடன்  முக்கிய வே‍ைலைத்திட்டங்களை அமுல்படுத்தி வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.இதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விடயத்தில் கூடுதலான கவனத்தினை அரசாங்கம்செலுத்தியுள்ளது. தனிநபர்களை தனிமைப்படுத்தல், குடும்பங்களை தனிமைப்படுத்தல், பிரதேசங்களை தனிமைப்படுத்தல், நாட்டை தனிமைப்படுத்தல் என்றவாறு நிலைமைகள் விரிந்து செல்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிப்பு முகாம்களில் தங்கவைத்து அவதானிக்கும் முறைகளும் சிறந்த பயன்களை பெற்றுக் கொடுத்துள்ளது. பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியதன் மூலம் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் வைரஸ் தொற்றும் நிலைமைகள் குறைவடைந்திருக்கின்றன.

அரசாங்கம் கட்சித்தலைவர்களை ஒன்றுகூட்டி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடி வருகின்றது. இதன் மூலமாகவும் பல சாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளன.அரசாங்கத்தின் முயற்சிகளை ஐ.நா.வின் பிரதிநிதி உள்ளிட்ட பலரும் பாராட்டிப் பேசியுள்ளனர். கொரோனா ஒழிப்பு  விடயத்தில் அரசாங்கத்தின்  ஆளுமை சிறப்பானதாகவே காணப்படுகின்றது.அரசாங்கம் பொது மக்களின் நலன் கருதி சலுகைகள் பலவற்றையும் அறிவித்துள்ளதும் நீங்கள் அறிந்த விடயமேயாகும்.

 பின்தங்கியோரின் நிலைமைகள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக மக்கள் அனைவருமே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளமை புதிய விடயமல்ல.அரசன் முதல் ஆண்டிவரை கொரோனா  எல்லோரிடமும் தனது வக்கிரத்தை காட்டி இருக்கின்றது. உயிரிழப்புகளிலும் பாரபட்சத்தை கொரோனா காண்பிக்கவில்லை.சகல மட்டங்களிலும் உயிரிழப்புக்கள் நிகழ்ந்திருககின்றன.

கொரோனா வைரஸ் அனைவரிடத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழுகின்ற பின்தங்கிய  மக்கள் கொரோனாவினால் கூடிய பாதிப்பினை ஏதிர்கொண்டுள்ளனர். அன்றாட உழைப்பாளர்கள் பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாரதிகள்,நடத்துனர்கள்,வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்கள், கூலித் தொழிலாளர்கள்  எனப்பலரும் இந்த வரிசையில் உள்ளடங்குகின்றனர். இவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு வழியின்றி ஒரு வேளை சோற்றுக்கே இன்று அல்லல்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது. கையில் பணவசதி இல்லாத நிலையில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் இவர்கள் வாழ்நாளை மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே கழிக்க வேண்டியுள்ளது.

பெருந்தோட்ட மக்கள்

பின்தங்கிய மக்கள் வரிசையில் பெருந்தோட்ட மக்களும் உள்ளடங்குகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தினை‌‌ தொடர்ந்து இம்மக்களின் பிரச்சினைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு பிரச்சினைக‍ளையும் சுமந்து கொண்டுள்ள இச்சமூகத்தினரின் பிரச்சினைகள் இப்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இம்மக்கள் தொழில் ரீதியான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடங்கிப்போய் இருக்கின்றன.பெருந்தோட்டங்களை அழிவில் இருந்து மீட்டெடுப்பதா? அல்லது தமது வாழ்க்கையை அழிவில் இருந்து மீட்டெடுப்பதா? என்ற போராட்டத்துக்கு மத்தியில் இப்போது இம்மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது.

மலையக மக்கள் தமது இருப்பை தக்க வைத்துக்கொண்டு முன்செல்ல வேண்டும் என்ற வேண்டுதலுக்கு மத்தியில் கொரோனாவால் மேலெழும்பியுள்ள பொருளாதார நெருக்கடியானது   இம்மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் சிதைத்துவிடுமோ? என்ற இயல்பான அச்சம் இப்போது மேலெழுந்திருக்கின்றது.  

கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு உரிய வசதிகள் இன்னும் கிடைக்காதுள்ளன.அம்மக்களின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சகலதுறைசார் நெருக்கடிகளுக்கும் தீர்வு இன்னும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.இம்மக்களின் நலன்களை பேணுவது தொடர்பில் ஜனாதிபதக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடலின்போதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மைய சர்வகட்சிகளின் கூட்டத்திலும் முன்னாள் அமைச்சர் மனோகணேசன் பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் உரியவாறு கிடைக்கவில்லை என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டி இருந்ததோடு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி இருந்தார்.இக்கட்டான இச்சந்தர்ப்பத்தில் அரசியல் தொழிற்சங்க  இலாபங்களை கருத்தில் கொள்ளாமல் மக்களின் நலன்கருதி செயற்பட வேண்டியதன் அவசியமும் மனோ கணேசனால் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் போஷாக்குமிக்கவர்களாக இருந்தால் கொரோனா வைரஸ் தொற்றில்  இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று பேராசிரியர் அஜந்தா பெரேரா தெரிவித்துள்ளார். மலையக மக்களைப் பொறுத்தவரையிலும் இவ்விடயம் கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளது.பெருந்தோட்ட  மக்கள் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர். தோட்டங்களை கம்பனிகள் பொறுப்பேற்றதன் பின்னர் இம்மக்களின் வாழ்க்கைப்பாதை மாற்றமடைந்துள்ளது.

இம்மக்களின் துன்பதுயரங்கள் மேலும் அதிகரித்துள்ளன. கம்பனியினராலும் தோட்ட நிர்வாகத்தினாலும் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் இம்மக்கள் ஆளாகி வருகின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியமும் இல்லாத ஒரு நிலையே காணப்படுகின்றது. இம்மக்களை மேலெழும்பச் செய்வதில் அரசாங்கத்தின் வகிபாகம் உரியவாறு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் அதிகமாகவே இருந்து வருகின்றன. கம்பனிகள் தொழிலாளர்களின் அபிவிருத்தியை. பார்த்துக்கொள்ளட்டும் என்று தட்டிக் கழிக்கும் மனப்பான்‍ைமையே அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.

இந்நிலைமையை கொரோனா விடயத்திலும் காணமுடிகின்றது.கிராமப்புற மக்களுக்கும் நகர்ப்புற மக்களுக்கும் கிடைக்கும் உதவிகள் பெருந்தோட்ட  மக்களுக்கு  கிடைக்கவில்லை. இந்நிலையில் அரசாங்கம் தொழிலாளர்களுக்கு மானியங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைைகள் வலுப்பெற்று வருகின்றன. மலையக மக்கள் சுய பொருளாதாரத்தை மையப்படுத்தியவர்கள் அல்லர். அரசாங்க உத்தியோகத்தர்கள் போன்று மாதாந்த வருமானமும் இவர்களுக்கு கிடையாது.நாட்கூலிகளாகவே இம்மக்கள் இருந்து வருகின்றனர். இதனால் கொரோனாவினால் ஏற்பட்ட ‍தொழில் பாதிப்பு இவர்களின் வருமானத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையிடம் இருந்து தேயிலையை இறக்குமதி செய்யும் பல நாடுகள் கொரோனா பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. எனவே  இப்போதைக்கு இந்நாடுகள் தேயிலையை இறக்குமதி செய்யப் போவதில்லை.எனவே இலங்கையின் தேயிலை மூலமான ஏற்றுமதி வருமானம் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளது.இதேவேளை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையும் உடனடியாக தேயிலையை ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையில் இல்லை. இந்நிலைமையானது   தோட்டத்தொழிலாளர்கள் விடயத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தவல்லதாகும்.இதுவும் தொழிலாளர்களின் வருமான பாதிப்பிற்கே இட்டுச்செல்லும்.எல்லா நாடுகளும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கே முக்கியத்துவமளித்து  வருகின்ற நிலையில் தேயிலையின் நிலை பாதிப்பை எதிர்நோக்கும்.

கொரோனா பரவல்

மலையகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுகையானது இப்போதைக்கு அதிகளவில் இல்லாவிட்டாலும் தொற்று பரவாது என்று கூறுவதற்கில்லை.இதற்கான சூழ்நிலைகள் இங்கு அதிகமாகவே காணப்படுகின்றன.மலையக இளைஞர்களின் நகர்ப்புற தொழில் நிலைகள், சுற்றுலா விடுதிகள் மற்றும் ஹோட்டல்களின் தொழில் நிலைகள், வெளிநாடு சென்று திரும்புவோர், சுற்றுலாப் பயணிகளின் மலையக வருகை எனப்பலவும் கொரோனாவின் பரவுகையை ஊக்கப்படுத்துவதாகவே உள்ளன என்பதும் தெரிந்த விடயமாகும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுமிடத்து மிகுந்த சிரமங்களை இம்மக்கள் எதிர்கொள்ள வேண்டி வரும். குடியிருப்பு, சனநெருக்கடி நிலைமைகள், போதிய  விழிப்புணர்வு இல்லாமை எனப்பலவும் கொரோனாவின் அதிகரிப்பை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.  கொரோனாவின் பரவுகையானது அரசியல், சமூக, பொருளாதார, கலாசார தாக்கங்கள் பலவற்றுக்கும் உந்துசக்தியாக அமையும்.

எனவே அரசாங்கம் கொரோனா ஒழிப்பு விடயங்களில் மலையக மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும். தோட்ட மக்களை கவனிக்கும் பொறுப்பு தோட்ட நிர்வாகங்களையும் கம்பனிகளையும் சார்ந்தது என்று அரசாங்கம் ஒதுங்கிக் ‍கொண்டுள்ள நிலையில் இறுதியாக எவரின் உதவியும் இன்றி தோட்ட மக்கள் இரண்டுங்கெட்டான் நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தோட்ட நிர்வாகமானது பல சந்தர்ப்பங்களில் தோட்டத்தில் வேலை செய்பவர்களை அரவணைக்கும் அதேவேளை வேலையற்ற தொழிலாளர்களையும் முதியோர்களையும் கை கழுவி விடுகின்றது.

இத்தகைய‍தொரு நிலைமை கொரோனா ஒழிப்பு விடயத்திலும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளிலும் இல்லாதிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சகல உதவிகளும் சகலருக்கும் கிடைக்க வழி செய்தல் வேண்டும்.

மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களின் தலைவர்களே இன்று அரசியல் தலைவர்களாகவும் சமூகத்தின் தலைவர்களாகவும் உள்ளனர்.தொழிற்சங்க சந்தாவை இடைநிறுத்தி விட்டதால் கொரோனாவுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று இவர்கள் கருதி விடக்கூடாது. தோட்டங்களில் வேலை நாட்கள்  மிகவும் குறைவாக இருந்தால் சந்தா அறவிடப்படமாட்டாது என்று சிரேஷ்ட தொழிற்சங்கவாதி ஒருவர் தெரிவிக்கின்றார். எனவே சந்தாவை இடைநிறுத்தியதோடு எல்லாம் முடிந்து விட்டது என்று யாரும் கருதக் கூடாது. சந்தா வேண்டாம் என்று கூறி பொறுப்புகளில் இருந்து அரசியல்வாதிகள் விலகிச் செல்ல முடியாது.

மலையக அரசியல்வாதிகள் தோட்டங்களுக்கு சென்று தொழிலாளர் நிலைமைகளை அவதானித்து தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். அத்தோடு இவர்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து கொரோனா விடயம் தொடர்பிலும் அதிலிருந்து மக்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆராய்ந்து அதற்கேற்ப செயற்படுதலும் வேண்டும்.அரசாங்கத்தின் உதவிகளை மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது குறித்தும் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பொய்த்தோற்றம் களையப்பட வேண்டும்

தொழிலாளர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசியல் தொழிற்சங்கவாதிகள் வங்கிகளின் ஊடாக கடனைப்பெற்று அதனை தொழிலாளர்கடையே பிரித்துக் கொடுக்கலாம். அரச நிவாரணங்களயும் பெற்றுக்கொடுக்கலாம். இதேவேளை தொழிலாளர்கள் வீட்டில் இருக்கும் இக்காலப்பகுதியை பயன்படுத்தி குறுகிய காலத்தில் பயன்தரக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்யலாம்.சொந்த வருமானம் கருதி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மலையக மக்களின் பிரச்சினைகள் சிங்கள ஊடகங்களில் வெளிவருவது குறைவாக உள்ளது. இந்நிலையானது மலையக மக்களுக்கு பிரச்சினைகளே இல்லை என்கிற எண்ணத்தை சிங்கள மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே தோற்றுவிக்கும் தோட்ட மக்களின் பிரச்சினைகளை தோட்ட நிர்வாகமே தீர்த்து வைக்கின்றது என்ற பொய்த்தோற்றம் களையப்பட வேண்டும்.

எனவே மலையக மக்களுடைய பிரச்சினைகளை தேசியமயப்படுத்தி தீர்வினை பெற்றுக்கொள்ள முற்படுதல்  வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றத்தை கூட்டி நாட்டின் சமகால நிலைமைகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து ஆராய வேண்டும் என்று வலியுறுத்தல்கள்  இடம்பெற்று வருகின்றன. இது ஒரு நல்ல முயற்சியாகும். பாராளுமன்றம் கூட்டப்பட்டு அங்கு மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் எதிரொலிக்கப்பட வேண்டும். இதன் ஊடாக  இந்த இக்கட்டான காலப்பகுதியில் உரிய நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தேசத்திற்கு எடுத்துக்காட்ட  முனைதல் பொருத்தமானதாகும். எனினும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பதிவிடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதனை மறந்துவிடக்கூடாது.   

கொரோனா பிரச்சினையானது பின்தங்கிய சமூகத்தினரை பொறுத்தவரையில் மேலும் பல சமூகப் பிரச்சினைகளயும் தோற்றுவிக்கும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.இதனால் சமூக மற்றும் குடும்ப விரிசல்கள் ஏற்படக்கூடிய அபாய நிலையும் காணப்படுகின்றது. எனவே இதனையும் கருத்திற்கொண்டு செயற்படுவதும் அவசியமாகும.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54