(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் விரைவாகப் பரவி வரும் தன்மை மற்றும் இலங்கைக்கு நாடு திரும்ப இயலாத நிலைமை போன்ற வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை கவனத்திற் கொண்ட வெளியுறவுகள் அமைச்சு, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் வசதிகளை மேற்கொள்வதற்காக உலகம் பூராகவுமுள்ள 67 நகரங்களை மையமாகக் கொண்ட தூதரகத் தலைவர்களுடன் கடந்த 2 நாட்களில் கலந்து ஆலோசனைகளை நடாத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.


இவ்விடயம் தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

5 பிராந்திய மையங்களின் (தெற்காசியா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா) தூதரகத் தலைவர்களுடன் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தலைமையில் இடம்பெற்ற தொடர்ச்சியான தொலைபேசி மாநாடுகளில், வைரஸ் தொற்று தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டல்களுக்கு அமைவாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.


ஒட்டுமொத்தமாக, அனைத்து இலங்கைத் தூதரகங்களும் பெரும்பாலும் 'வீட்டிலிருந்து பணி புரிதல்' அடிப்படையில் பணியாற்றினாலும், அந்தந்த நிலையங்களிலுள்ள மாணவர் சமூகங்களுடனும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடனும் தொடர்ச்சியாக தொடர்புகளை மேற்கொண்டு வருவதுடன், தூதரக ஊழியர்களை இலகுவாக அணுகிக்கொள்ளக்கூடிய 24 மணி நேர அவசர தொலைபேசி அழைப்பு இலக்கங்களை நிறுவியுள்ளன.

அந்தந்த நிலையங்களில் இலங்கையர்களின் தரவுத்தளங்களைப் புதுப்பிக்கும் பணிகள் தூதரகங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அதே வேளையில், தகவல்களைப் பகிரக்கூடிய இணைப்புக்களைப் பராமரிப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் சமூக ஊடகத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


நாட்டில் வைரஸ் பரவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டவுடன், இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக மேற்கொண்டுள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என சமூக உறுப்பினர்கள் மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பிராந்தியங்களிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் உறுதியளித்துள்ளன.
 சம்பந்தப்பட்ட உள்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாகவும், தேவைக்கேற்ப தலையீடுகளை மேற்கொண்டு அனுமதிகளைக் கோருவதன் மூலமாகவும் அவசரகால கடவுச்சீட்டு, வீசா நீடிப்புக்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான விடயங்களில் உதவுவதற்காக, மத்திய கிழக்கிலுள்ள இலங்கைத் தூதரகங்களும், மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் தெற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளும், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுடனும், சமூகப் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்தும் வலையமைப்புக்களை பேணுவதற்கான தமது முயற்சிகள் குறித்து தெரிவித்தன.
 இலங்கையின் அந்நிய செலாவணிக்கு மிகப்பெரிய பங்களிப்புக்களை வழங்கும் முக்கியமான இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அமைச்சு, செல்லுபடியாகும் வீசாக்கள், வேலையற்றோர் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாதோர் போன்ற இலங்கையர்களின் நல்வாழ்வை தூதரகங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முறையாகப் பராமரித்து, வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.

இலங்கையர்கள் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படும் வரை அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக, வேலையற்ற நபர்களை ஆதரிக்கும் உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்கள், ஆட்சேர்ப்பு முகவர்கள், ஏனைய சமூக அமைப்புக்கள், ஐ.ஓ.எம். மற்றும் கரிட்டாஸ் போன்ற சர்வதேச அமைப்புக்கள் போன்றவற்றுடன் சில இலங்கைத் தூதரகங்கள் தொடர்புகளை மேற்கொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.

சில மத்திய கிழக்கு நாடுகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலங்கள் குறித்த அறிவித்தல் மற்றும் அத்தகைய நடவடிக்கைகளின் விளைவுகள் ஆகியன இந்தத் தொலைபேசி மாநாடுகளின் போது விவாதிக்கப்பட்டன.
 உலகெங்கிலும் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களைப் பொறுத்தவரை, மாணவர்கள் விடுதிகளில் தங்குவதற்கான தங்குமிட வசதிகள், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அணுகிக் கொள்ளுதல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக, மேற்கு நாடுகளிலுள்ள தூதரகங்கள் உட்பட பெரும்பாலான தூதரகங்கள் பல்கலைக்கழக நிர்வாகங்களுடனும் மாணவர் சமூகங்களுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தன.
 வீசாக் காலம் நிறைவடையும் மாணவர்களுக்கும், ஏனைய வதிபவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு வருகை தருபவர்களுக்கும் வீசா நீடிப்புக்களைப் பெறுவதற்காகவும் இந்தத் தூதரகங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள காரணிகளால், மே 12 ஆந் திகதி வரை இலங்கைக்கு வருகை தரும் 15,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டது. 
பொருளாதார முன்னணியில், இந்த நிலையற்ற காலகட்டத்தில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் நீண்ட காலத்திற்கு தங்களை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஒத்துழைப்புடன், தனது தூதரக வலையமைப்பின் மூலமாக அமைச்சு உதவுகின்றது.

இந்த வகையில், சந்தைத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும், எமது முக்கிய ஏற்றுமதி மூல நாடுகளில் துணைக் கட்டுப்பாடுகளை வழங்குவதற்கான சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு தூதரக வலையமைப்பு உதவுகின்றது. தற்போதுள்ள தயாரிப்புக்களுக்கான புதிய வாய்ப்புக்களை இலங்கைக்கு பெற்றுக் கொள்ளுதல் மற்றும் கோவிட் – 19 நிலைமை தொடர்பான தேவைகள் ஆகியன இதில் உள்ளடங்கும்.
 அவசரமாகத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அரசாங்கத்திற்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் கொள்வனவு செய்வதை ஒருங்கிணைப்பதற்காக, இலங்கை சுகாதார அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதில் சில தூதரகங்கள் மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகளையும் அமைச்சு கவனத்தில் எடுத்துக்கொண்டது. இலங்கையில் வைரஸ் பரவுவதைத் தணிப்பதற்காக, சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து, பரிசோதனைக் கருவிகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியுமாறு தூதரகங்கள் மேலும் கோரப்பட்டன.
 இதற்கிடையில், மார்ச் 26 ஆந் திகதி வெளியுறவுகள் அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' என்ற புதிய இணைய முகப்பில், வெளிநாட்டில் வசிக்கும் 45,770 இலங்கையர்கள் தம்மைப் பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கில் வசிப்பவர்களாவர். இந்த இணைய முகப்பிற்கு 1955 கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டு, தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களும் தமது கருத்துக்களையும், அக்கறைகளையும் அமைச்சு மற்றும் தூதரகங்களுக்குத் தெரிவிப்பதற்கானதொரு நேரடி இடைமுகமாக செயற்படும் இந்த இணைய முகப்பு, வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.