(செய்திப்பிரிவு)

பாராளுமன்ற சட்டத்தினடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு பிரிதொரு தினத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு காணப்படுகிறது.

எனவே உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது அவசியமற்றது என்பதே தற்போது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினமான மார்ச் 2 ஆம் திகதியிலிருந்து 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெறவேண்டும்.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாது என்றும், அவ்வாறு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையில் சிக்கல் ஏற்படும் என்பதால் இது தொடர்பில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 இது தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே உதய கம்பன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது ,

தேர்தலை நடத்துவதற்கான பிறிதொரு தினத்தை தீர்மானிப்பது மாத்திரமின்றி தேர்தல் நடத்தப்பட்டு 3 மாத காலப்பகுதிக்குள் அரச நிதி செலவீனங்கள் பற்றிய அதிகாரமும் ஜனாதிபதிக்குக் காணப்படுகிறது.   

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மார்ச் 2 ஆம் திகதி அறிவித்தமைக்கமைய 12 – 19 திகதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

அத்தோடு இம் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை காரணமாக தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தலை ஒத்தி வைப்பதாக தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது.

அந்த காலத்திற்கேற்ற தீர்வாகும். அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரைக்கமைய பாராளுமன்றத்தை கலைத்ததன் பின்னர் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விற்கான தினம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாத காலத்திற்குள் இருக்க வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவானது குறித்த தினத்தில் தேர்தலை நடத்த முடியாவிட்டால் அரசியலமைப்பு ரீதியில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற சட்டத்தின் 113 ஆவது உறுப்புரைக்கு அமைய , ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட தினத்தில் ஆணைக்குழுவால் பொதுத் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை ஜனாதிபதியால் தீர்மானிக்க முடியும். அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது.

எனவே தேர்தலை நடத்தும் தினம் தொடர்பில் சிக்கல் இல்லை. தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் இது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும். அரசாங்கத்தின் நிலைப்பாடானது உயர் நீதிமன்றத்தின் ஆலோசனை அவசியமற்றது என்பதேயாகும்.