(நா.தனுஜா)

அரசியல்வாதிகள் முகக்கவசங்களை அணிவது தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் ஏற்படும் வகையில் நடந்துகொள்வது கவலைக்குரிய விடயம் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முகக்கவசங்கள் அணிவது தொடர்பில் அண்மைய காலங்களில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் விடயங்கள் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தற்போது முகக்கவசங்களை அணிவதாகப் பதிவாகியிருக்கிறது.

இவர்களில் குறிப்பாக அரசியல்வாதிகள் முகக்கவசங்களை அணிவது தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் ஏற்படும் வகையில் நடந்துகொள்வது கவலைக்குரிய விடயமாகும்.அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கோ அல்லது கெமராவிற்கு முன் பேசும் போதோ தாம் அணிந்திருக்கும் முகங்கவசங்களை கீழிறக்குகின்றனர்.

கூட்டங்களுக்கு சமுகமளிக்கையில் சரியாக முகக்கவசங்களை அணிந்திருப்பினும், ஏதேனும் கருத்துக்களை வெளியிடுகளை அதனை அகற்றுகின்றனர். மீண்டும் அதனையே அணிந்து கொள்கின்றனர்.

இதன் காரணமாக அவர்கள் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்துவதுடன், முகக்கவசங்களை அணியாதவர்களை விடவும் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கின்றன. அத்தோடு மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும் செயற்படுகின்றனர்.

எனினும் ஜனாதிபதி கூட்டமொன்றுக்கு முகக்கவசம் அணிந்து வந்திருந்த போதிலும், அவர் கருத்துக்களை வெளியிடும் போதும் அதனை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.