வட கொரியாவில் ஒருவர் கூட கொரோனா எனப்படும் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்ற கூற்றானது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக தென் கொரியாவில் உள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் தலைவர் ஜெனரல் ரோபர்ட் ஆப்ராம்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளிலும், பிராந்தியங்களிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக 53 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே வட கொரியாவின் மத்திய அவசரகால தொற்று நோய் எதிர்ப்பு தலைமையகத்தின் பணிப்பாளர் பாக் மியோங்-சு வெள்ளிக்கிழமை சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் தனது நாட்டு நில‍ைமை தொடர்பில் கூறுகையில்,

வட கொரியாவில் கொரோனா வைரஸால் ஒருவர் கூட இதுவரை பாதிக்கப்படவில்லை. எங்கள் நாட்டிற்குள் நுழையும் அனைத்து பணியாளர்களையும் தனிமைப்படுத்தல், பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளோம்.

மேலும் நாட்டிற்கு வரும் அனைத்து பொருட்களையும் முழுமையாக கிருமி நீக்கம் செய்கிறோம். அது மாத்தரமன்றி கடல் மற்றும் ஆகாய எல்லைகளை மூடுவதிலும் அதிகளவு கவனம் செலுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இந் நிலையிலேயே தென் கொரியாவில் உள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் தலைவர் ஜெனரல் ரோபர்ட் ஆப்ராம்ஸ், வட கொரியாவில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை என்பது பொய்யான கூற்று.

வடகொரியாவில் கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம். ஆனால் எத்தனைபேர் என்பதை உறுதிபட கூற முடியாது எனக் கூறியுள்ளார்.

என்.கே. என்ற வட கொரியா தொடர்பான தகவல்களை பகுப்பாய்வு செய்யும் செய்தித்தளம் வட கொரியாவில் கொரோனா தொற்றாளர்கள் உள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது.

அது மாத்திரமல்லாது வட கொரியாவனது சீனா மற்றும் தென் கொரியாவின் எல்லையாக இருப்பதானாலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதேவளை வட கொரியா, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட கொரோனாவுக்கு எதிரான திட்டங்களை விரைவாக முன்னெடுத்தாக தென் கொரியா கூறியுள்ளது.

ஜனவரி பிற்பகுதியில், வட கொரியா அதன் எல்லைகளை மூடிவிட்டு பின்னர் தலைநகர் பியோங்யாங்கில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரை தனிமைப்படுத்தியதாகவும் தென் கொரியா சுட்டிகாட்டியுள்ளது.