இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நடைபயணமாக வந்த 23 வயது இளைஞர், வழியில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

கொவிட்-19 வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே வர்தா எனும் இடத்தில் வேளாண் கல்லூரியில் படித்து வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் தனது நண்பர்கள் 29 பேருடன் வாகனங்கள் ஏதும் இல்லாததால் 9 நாட்களாக நாக்பூரில் இருந்து நடந்து வந்துள்ளனர்.

வழி போக்கில் கிடைத்த லொறி  சாரதியின் உதவியுடன் லொறியில் ஏறி வந்த இளைஞர்கள் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் வந்துள்ளனர். அங்கு வாகனச் சோதனையில் சிக்கிய இவர்கள் உடனடியாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  மாணவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.