கொரோனா அச்சுறுத்தல் உலகை ஆட்டிப்படைக்கும் இந்த நேரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் சொல்லும் அறிவுரைகளை கேளுங்கள் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக ரகுமான் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது...

"இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வைத்தியசாலைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும், தன்னலமற்ற மனதிற்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இந்த பயங்கரமான தொற்று நோயை சமாளிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள் . இதை பார்க்கும் பொழுது நெகிழ்ச்சியாக இருக்கிறது. எம்முடைய உயிரை காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள். உலகத்தை தலைகீழாக மாற்றிய இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராக நமது வேறுபாடுகளை மறந்து ஒன்று படுவதற்கான நேரம் இது.

கடவுள் உங்கள் இதயத்திற்குள் இருக்கிறார் . எனவே மத வழிபாட்டு தலங்களுக்கு கூடி வந்து, குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல. அரசாங்கத்தின் ஆலோசனைகளை கேளுங்கள். சில வாரங்களுக்கான சுய தனிமை, உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கான வாழ்க்கையை கொடுக்கலாம்.

நீங்கள் கொரோனாவை பரப்பும் கருவியாக இருக்காதீர்கள். சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். இந்த நோய் உங்களுக்கு வருவதற்கு முன் எந்த எச்சரிக்கையும் கொடுப்பதில்லை. எனவே நீங்கள் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று கருதவேண்டாம். சிந்தனையுடன் இருப்போம். பல லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை நம் கையில் உள்ளது." என்று பதிவிட்டிருக்கிறார்.

இவரது பதிவிற்கு இணையத்தில் பலரும் ஆதரவும், பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.