இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

அணிக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் மெத்தியுஸ் 73 ஓட்டங்களை பெற்றதோடு, அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சீக்குகே பிரசன்ன 28 பந்துகளில் 59 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சினை பொருத்தவரையில், வில்லி, வோர்க்ஸ் மற்றும் பிளங்கட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறியது. 82 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

இதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோர்க்ஸ் ஆட்டமிழக்காமல் 95 ஓட்டங்களை பெற்றதோடு, பட்லர் 93 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இறுதியில் 1 பந்துக்கு 7 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் பிளங்கட் 6 ஓட்டத்தை விளாசி போட்டியை சமநிலை படுத்தினார்.

இங்கிலாந்து அணி 8 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மெத்தியுஸ், லக்மால் மற்றும் பிரதீப் தலா 2 விக்கட்டுக்களை கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோர்க்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.