மெக்ஸிக்கோவின் 'Grupo Modelo' நிறுவனம் ''கொரோனா'' பியர் தயாரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

மெக்ஸிக்கோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது. வியாழக்கிழமை வர‍ை அங்கு 1,510 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 50 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டே மெக்ஸிக்கோ அரசாங்கம் இந்த வாரம் நாட்டில் சுகாதார அவசரகால நிலைமையை அறிவித்துள்ளதுடன், அத்தியாவசியமற்ற வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது. 

அதன் காரணமாகவே Grupo Modelo நிறுவனம் “கொரோனா பியர்“ உட்பட ஏனைய மதுபான உற்பத்திகளையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை முதல் Grupo Modelo நிறுவனம் தனது மதுபான உற்பத்தி பணிகளை நிறுத்தவுள்ளதுடன், தடை உத்தரவு நீக்கப்பட்டதுடன், மீளவும் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதேவளை பியர் உற்பத்தி பணிகளை அரசாங்கம் அத்தியாவசிய சேவையாக கருத்தினால், எமது ஊழியர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் வீட்டிலிருந்து பணிபுரியும் அதேநேரத்தில் விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளதாகவும் Grupo Modelo நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மிகவும் பிரபல்யமான “கொரோனா“ பியரானது 180 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.