இலங்கையில் ஊரடங்கு அமுலாக்கப்படும் இடங்களிலுள்ள மக்கள் பணத்தை மீளப்பெறுவதற்கு வசதியேற்படுத்துவதற்காக, நடுமாடும் ஏ.டி.எம் இயந்திரங்களைச் சேவையில் ஈடுபடுத்தி வருவதாக, கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. 

இந்த நடுமாடும் வங்கி இயந்திரங்கள் பயணிக்கும் இடங்கள், நேரங்கள் ஆகியன, வங்கியின் இணையத்தளத்திலும் வங்கியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் நாள்தோறும் அறிவிக்கப்படுமெனவும் வங்கி தெரிவித்தது. 

கொமர்ஷல் வங்கியின் நடமாடும் வங்கி இயந்திரங்கள் மூலமாக ஏ.டி.எம் கார்ட்களைக் கொண்டு மாத்திரமல்லாமல் வங்கிப் புத்தகங்களைக் கொண்டும் பணத்தை மீளப்பெறக்கூடிய வசதிகாணப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக, ஏனைய அடிப்படை வங்கிச் சேவைகளும் வழங்கப்படுகின்றன. 

இதேவேளை, ஊரடங்கு தற்காலிகமாக நீக்கப்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து கொமர்ஷல் வங்கிக் கிளைகளும் காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரையில் மூன்று மணித்தியாலங்கள் செயற்பட்டு, அத்தியாவசிய வங்கிச் சேவைகள் வழங்கப்படுமென வங்கி தெரிவித்தது. 

அதேபோல், ஊரடங்கு நேரத்திலும் வாடிக்கையாளர்களின் அவசரமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தெரிவு செய்யப்பட்ட கிளைகளை வங்கி திறந்து வைக்குமெனவும் வங்கி குறிப்பிட்டது. 

இக்காலப் பகுதியில் இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தல், ´ஃப்ளாஷ்´ டிஜிட்டல் கணக்கை ஆரம்பித்தல் ஆகியன தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு இலகுவான ஏற்பாடுகளையும் வங்கி ஏற்படுத்தியுள்ளது. இச்சேவைகளை ஆரம்பிப்பதற்குக் கிளையொன்றுக்குச் செல்ல வேண்டிய தேவையை இல்லாது செய்து, தாமாகவே இவ்வசதிகளுக்குப் பதிவு செய்யும் ஏற்பாடு மூலமாகவே இது இலகுபடுத்தப்பட்டுள்ளது. 

இணையவங்கிச் சேவைக்கான விண்ணப்பத்தை வங்கியின் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவமானது கணக்குரிமையாளரின் தேசிய அடையாள அட்டையின் இரண்டு பக்கங்களின் புகைப்படங்களோடு, வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். இவ்வசதியை ஆரம்பிப்பதற்குத் தொலைபேசி மூலமாக வங்கியின் பணியாளரொருவர் அழைப்பை ஏற்படுத்துவார். 

வங்கியின் தனித்துவமான டிஜிட்டல் வங்கிச் செயலியான ஃப்ளாஷ், அப்பிள் அப் ஸ்டோர் அல்லது கூகிள் பிளே ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து தரவிறக்கப்பட முடியும். இதிலும் தாமாகவே பதிவு செய்து, வசதியை ஆரம்பிக்க முடியும். அடையாளப்படுத்தும் ஆவணங்களை அனுப்பி, வாடிக்கையாளர் தம்மைப் பதிவு செய்த பின்னர், வங்கிக் கிளைக்குச் செல்லாமல் பல்வேறான நிதியியல் பரிவர்த்தனைகளில் ஈடுபடமுடியும்