ஒரு பெண் குழந்தை இந்தப் பூமியில் பிறந்து வளர்ந்து பருவமடைந்து தனது கல்வி மற்றும் தொழில் நிலைகளில் முன்னேறி திருமணத்தை நிறைவு செய்த பின்னர் ஒரு குழந்தைக்குத் தாயாகும் போதே தனது பிறப்பின் பூரணத்துவத்தை உணர்கிறாள். இதன் போது பெண் ஆனவள் கருவுற்று மிகவும் அவதானத்துடன் கர்ப்ப காலத்தை கடந்து குறித்த நாளில் பிரசவமும் நடைபெறும். இதன்போது அழகிய ஒரு குழந்தையையும் பெற்றெடுக்கிறாள். ஆனால் இத்துடன் அவளது பணி முடிந்துவிடவில்லை. அக் குழந்தையை பேணி பராமரித்து தனது உடல் நலத்தையும் குழந்தையின் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயான பெண்ணின் கடமையாகும். பிரசவத்திற்கு பின்னரான பராமரிப்பானது குழந்தை பிறந்த பின்னருள்ள முதல் 6 கிழமைகளில் (6 Weeks) ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் என்பவற்றைத் தெளிவுபடுத்துகின்றது.
இக்காலப் பகுதியில் கருத்தரிப்பின்போது பெண்ணின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பழையபடி முந்திய நிலைக்கு மாறுகின்றன.
இவ்வாறு 6 கிழமைகளில் ஏற்படும் மாற்றங்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.
1)இனப் பெருக்க உறுப்புகளின் உள்திருப்பம்
2)பால் சுரத்தலைத் தூண்டுதல், பாலூட்டல்
3)புதிய குழந்தையால் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மனோபாவத்தை சரிப்படுத்தலும் அதனால் குழந்தையுடன் ஏற்படும் பிணைப்பும்.
உடலியல், உடற்றொழிலியல் என்பவற்றில் ஏற்படும் மாற்றங்கள்: (A natomy and Physiology)
பிரசவத்தின்போது குழந்தையுடன் தொப்புல்கொடி மற்றும் பிள சென்ரா (Placenta) என்பனவும் வெளியேற்றப்படுவதனால் கருத்தரிப்பின் போது அதிகளவு சுரக்கப்பட்ட ஹோர்மோன்களும் குறைகின்றன.
முதற் கிழமைக்குள் ஹோர்மோன்களின் அளவு சடுதியான கீழிறங்கி, கருத்தரிப்பிற்கு முந்திய அளவை அடைகின்றன.
தாய் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் காலப் பகுதியில் இந்த ஹோமோன்களின் அளவு சற்றுக் குறைந்த நிலையில் தொடர்ந்திருக்கும் இதனாலேயே பாலூட்டும் காலத்தில் பெண்ணானவள் மீண்டும் கருத்தரிக்கும் வீதம் குறைவாகக் காணப்படுகிறது.
பிரசவத்தின் பின் கிட்டதட்ட 10 நாட்களுக்குள் கருப்பையானது அளவில் குறைந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடுகிறது. நான்கு கிழமைகளுள் முற்றாகப் பழைய நிலைக்குத் திரும்பி கர்ப்பந்தரிப்பதற்கு முன்பிருந்த நிலையை அடைகின்றது. இந்நிலையின் போது கர்ப்பப்பை வாய்ப்பகுதி 100% பழைய நிலைக்கு மாறுவதில்லை. அது சற்று அகன்று இருக்கும். இதேபோல் ஒரு குழந்தையைத் தாங்கும் அளவிற்கு விரிவடைந்திருந்த யோனிக் குழலும் பழைய நிலையை 100% அடைவதில்லை. குழந்தை பெற்றவர்களில் இவை சற்று மாற்றமுற்றனவாகவே காணப்படுகின்றன.
கர்ப்ப காலத்தில் விரிவடைந்திருந்த வயிற்றுத் தசைகள் அளவுக்கு அதிகமாக நீட்டப்படுவதால் குழந்தை பிறந்து சில நாட்களின் பின் உங்கள் வயிறு மெது மெதுப்பாகவும் தொள தொளப்பாகவும் இருக்கும். இவை பழைய நிலைக்கு வர நீண்ட நாட்கள் (பல கிழமைகள்) ஆகும். இவற்றுக்கு தகுந்த உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் வயிறும் தசைகளும் இறுக்கமடையும். தசைகள் நீள்வதால் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் அடையாளங்கள் இலகுவில் மறைவதில்லை. (Stretch Mark) ஆனால் அவற்றுக்கும் தற்காலத்தில் பல்வேறுபட்ட மருந்துகள் (Cream/ Lotion) உருவாக்கப்பட்டுள்ளன. தேவை ஏற்படின் அவற்றினை உபயோகிக்கலாம்.
குழந்தைக்குத் தாய்ப் பாலூட்டும் பெண்களில் முட்டை வெளியேற்றம் தடைப்படுவதால் மாதவிடாய் பல மாதங்களுக்கு வெளிப்படாது.
தாய்ப் பாலூட்டாத பெண்களில் ஹோர்மோன்கள் பழைய நிலைக்கு வருவதால் குழந்தை பிறந்த ஆறு கிழமைகளின் பின்னர் முதல் மாதவிடாயை எதிர்பார்க்கலாம்.
பெண்களின் சிறுநீரகங்களும் அதன் பகுதிகளும் கருத்தரிப்பின் போதும் பிரசவத்தின் போதும் பல மாறுதல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகின்றன. இவை முன்மாதிரி பழைய நிலையில் வேலை செய்வதற்குப் பல கிழமைகள் ஆகலாம். சிறுநீரக செயற்பாடுகள் பழைய நிலைக்கு திரும்புவதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகலாம்.
இருதயம் இரத்தக் குழாய்கள் என்பவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், இரத்த உறைதல் காரணிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன கருத்தரிப்பிற்கு முந்திய நிலையை அடைய ஆறு கிழமைகள் எடுக்கும்.
எனவே பிரசவத்திற்குப் பின்னான ஆறு கிழமை காலப் பகுதியில் பூரண ஓய்வு பெண்ணிற்கு ஆபத்தை விளைவிக்கலாம். நீங்கள் சுறுசுறுப்பில்லாமல் இருந்தால் இரத்தம் உறைவு அடைவதற்கும் அதன் பின் இரத்தம் உறைந்து கட்டி படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. (Thrombo Embolism)
எனவே இக்காலப் பகுதியில் கை கால்களை பயிற்சி செய்தல், நடைபோடுதல் என்பன அவசியம்.
மேலும் பிரசவத்திற்குப் பின்னான காலப் பகுதியில் ஏற்படும் மூல வியாதி (Piles), நாரிவலி, இடுப்பு வலி, போன்றவற்றுக்கு தகுந்த வைத்திய ஆலோசனையின் படி வலி நிவாரணிகள் மற்றும் மருந்துகள் பாவிக்கலாம்.
தாய்ப் பாலூட்டல்
பிரசவத்திற்குப் பின்னர் பால் சுரத்தலை தூண்டுதல், அதற்கேற்ப உணவுப் பழக்கங்களை கடைப்பிடித்தல் போன்றவற்றின் மூலம் குழந்தைக்குப் பாலூட்டுவதே சிறந்தது.
இதனால் ஏற்படும் நன்மைகள்
1தாய்ப்பால் தான் ஒரு குழந்தைக்கு சிறந்த உணவு, பசும்பாலுடன் ஒப்பிடும்போது தாய்ப்பாலில் குறைந்தளவு புரதமும் அதிகளவு கொழுப்பு மற்றும் சீனிச்சத்து (Lactose) காணப்படுகின்றன.2)நோய்களை எதிர்க்கும் சக்தி போத்தல் பால் ஊட்டப்பட்ட குழந்தைகளுடன் ஒப்பிடும் போது தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளில் குறைந்தளவு வாந்தி, வயிற்றோட்டம் என்பன காணப்படுகின்றன. தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் சில சுவாச நோய்களுக்கும் சில நோய்த் தொற்றுகளுக்கும் எதிராகப் பாதுகாப்புப் பெறுகின்றன.
மற்றும் தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளின் நரம்பு மண்டல (மூளை) செயற்பாடுகள் சிறப்பானதாகக் காணப்படுகின்றன.
இக் குழந்தைகளில் இளமையில் ஏற்படும் நீரிழிவு நோய், குடலில் ஏற்படும் அழற்சி நோய் மற்றும் சில புற்றுநோய்கள் குறைந்தளவில் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது.
தாய்ப்பாலூட்டுதல் ஒரு இயற்கையான கருத்தடை முறையாகும். இக்காலப் பகுதியில் பெண் கர்ப்பந்தரிப்பதில்லை.
தாய்ப்பாலூட்டும் பெண்களில் மெனோபோஸ் பருவத்தின்பின் ஏற்படும் மர்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.
பிரசவத்தின் பின் உடனடியாக பாலூட்டுவதை ஆரம்பிப்பதன் மூலமும் அடிக்கடி குழந்தை மார்பகங்களை உறிஞ்சுவதால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
பிரசவத்தின்பின் வைத்தியசாலையில் இருக்கும் போதே பாலூட்டுவதற்கான முறைகள் மற்றும் ஆலோசனைகளை அதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற தாதியரிடம் கேட்டறிந்து செல்ல வேண்டும்.
தாய்ப்பாலூட்டும் காலப் பகுதியில் பாவிக்கும் மருந்துகளை மருத்துவ ஆலோசனையின்படி எடுக்க வேண்டும். ஏனெனில் சில மருந்துகள் பால் சுரத்தலை குறைக்கலாம். அல்லது குழந்தைக்கு தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
தாய்ப்பாலூட்டும் காலத்தில் ஏற்படக்கூடிய முலைக்காம்பில் ஏற்படக்கூடிய வெடிப்பு, மார்பகங்களில் ஏற்படும் கிருமித்தொற்று பால் கட்டிபடல் போன்றவற்றுக்கு வைத்திய ஆலோசனை பெறுவது சிறந்தது.
பெண்ணில் ஏற்படும் உளச் சோர்வு (Depression)
இது அநேகமாக சில பெண்களில் பிரசவம் நடைபெற்ற 3, 5 ஆம் நாட்களில் ஏற்படலாம். இது பல்வேறு நிலைகளில் தோன்றலாம். பெண்ணை கூட இருப்பவர்கள் அவதானத்துடன் பார்ப்பதன் மூலமும் கணவன் மற்றும் உறவினர்களின் அக்கறை, உதவி மற்றும் பரிவு என்பவற்றின் மூலம் இந்நோயை அறிந்து தேவையான போது வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து விடுபடலாம்.
உடலுறவு: பிரசவத்தின் பின் மீண்டும் உடலுறவை ஆரம்பிப்பதற்கு ஒரு குறித்த காலப்பகுதி இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் இதனை ஆரம்பிக்கலாம். உங்கள் புதிய குழந்தை உங்களின் காலத்தில் பெரும்பாலானதை எடுத்துக் கொள்ளும். அத்துடன் பிரசவத்தில் ஏற்பட்ட வலி, அசௌகரியம் மற்றும் பாலூட்டல் போன்ற காரணங்களால் நீங்கள் இதற்கு தயாராகாமல் இருக்கலாம். இதற்கு சில கிழமைகள் எடுக்கலாம்.
கருத்தடை
பிரசவத்தின் பின் உங்களுக்கு பொருத்தமான கருத்தடை முறையினை பொருத்தமான காலப் பகுதியில் உங்களின் வைத்தியரின் ஆலோசனையின் படி ஆரம்பிக்க வேண்டும். இதனால் தேவையற்ற கருத்தங்கல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
பிரசவத்தின் பின்னான பரிசோதனை (Postnatal Examination)
பிரசவத்தின் பின் குறித்த தினத்தில் (வைத்தியர் குறித்திருந்த நாளில்) குழந்தைக்குரிய பரிசோதனைகள் மற்றும் தாய்க்குரிய பரிசோதனைகளை ஒழுங்காக வைத்தியசாலை சென்று மேற்கொள்ள வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM