கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் காணொளி மூலமான உரையொன்றின்போதே பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.

அந்த காணொளி உரையில் நரேந்திர மோடி மேலும் கூறுகையில்,

ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி. அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. 

நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஊரடங்கால் 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். 

கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம். 

ஏப்ரல் 5 ஆம் திகதி ஞாயிறன்று இரவு 09.00 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு வீட்டில் 9 நிமிடங்கள் மெழுகுவர்த்தி, அகல்விளக்குகளை ஏற்றுங்கள்.

அது மாத்திரமன்றி டோர்ச் லைட் அல்லது தொலைபேசி மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்குமாறும் இதன்போது வலியுறுத்தினார்.

இந்தியாவில் இதுவரை 2,567 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 72 பேர் அதனால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.