(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கொடை  தொற்று நோய் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த விஷேட வைத்திய நிபுணர்  பிரியங்கர ஜயவர்தன பூரண குணமடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

நேற்று குணமடைந்த 21 ஆவது நபராக அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அடுத்தடுத்தான  பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது, அவர் கொரோனா தொற்றிலிருந்து முற்றாக மீண்டுள்ளமை தெரியவந்துள்ள நிலையிலேயே அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இது குறித்து குறித்த வைத்தியர் நேற்று தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றினை இட்டுள்ளதுடன், தான் குணமடைந்த போதும் மேலும் 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அதன்படி தான்  சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டி,  தன்னை குணப்படுத்த உதவிய  அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.