(ஆர்.யசி)


கொரோனா தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடுக்கவேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்த இஸ்லாமிய நபரின் உடலை தகனம் செய்ததை அடுத்து அதற்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் எதிர்ப்புக் கருத்துக்கள் எழுந்த நிலையில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த காரணம் பிரதான காரணியாக பேசப்பட்டுள்ளது.  

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளான ரவுப் ஹகீம், ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தப்பா உள்ளிட்ட பிரதிநிதிகளே இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் நபர்களை நல்லடக்கம் செய்ய ஒன்று உடலை எரிக்க முடியும், அதேபோல் புதைக்கவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சுகாதார அமைப்புகள் கூறியுள்ளனர்.

அவ்வாறு இருக்கையில் இலங்கையில் உயிரிழந்த இஸ்லாமிய நபர் எரிக்கப்பட்டுள்ளதானது இஸ்லாமிய மத சம்பிரதாய முறைமைகளை மீறும் விதத்தில் அமைந்துள்ளது.

ஆகவே இந்த விடயத்தில் இஸ்லாமிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்த சுகாதார அதிகாரிகள் இலங்கையில் நிலைமைகளை கருத்தில்  கொண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் சகல  உடல்களையும் எரிக்கவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால நிலைமையில் எவரும் மத சடங்குகளை கருத்தில் கொள்ளாது சுகாதார ரீதியிலான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் செயற்பட வேண்டும்.

அதுவே நாட்டு மக்களை பாதுகாக்க ஒரே வழிமுறையாக அமையும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் அரச தரப்பினர் இடையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இது குறித்து ஆராய விசேட  குழுவொன்றை நியமிக்க வேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இஸ்லாமிய முறைமைகளை நன்கறிந்த, அதேபோல் மருத்துவ, அறிவியல் சார் நபர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் அது குறித்து சிந்திப்பதாகவும் எனினும் மருத்துவ துறையினர் என்ன கூறுகின்றனரோ அதனை கையாள்வதே ஆரோக்கியமனதாக அமையும் எனவும் கூறியுள்ளனர்.