(ஆர்.ராம்)


மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் சுமார் 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தினை இழந்துள்ளதாக இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரெஹான் லக்கானி தெரிவிக்கையில், சீனாவில் ஊற்றெடுத்த கொரோனா வைரஸ் மேற்குலகத்தினையும் மோசமாக பாதித்துள்ளது. இதனால் இலங்கை ஆடை ஏற்றுமதித்துறையானது மிகுந்த பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளது.குறிப்பாக மார்ச் முதல் எதிர்வரும் ஜூன் வரையில் எமக்கு வருமானமாக கிடைக்கவிருந்த 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் முழுமையாக சீர்குலைந்துள்ளது.

இதனைவிடவும் தற்போதைய நிலையில் 200 முதல் 500பில்லின் அமெரிக்க டொலர்கள் வரையில் ஏற்றுமதிக்கான முற்கூட்டிய பதிவுகளும் கிடைக்காது போயுள்ளன என்றார்.

இதேவேளை, இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 40சதவீதம் ஆடை ஏற்றுமதி காணப்படுவதோடு வர்த்தக ஏற்றுமதியில் 52சதவீதமாகவும் உள்ளது. மேலும் ஆடை ஏற்றுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6சதவீத பங்களிப்பினை செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.