அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில்; பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை - அனில் ஜாசிங்க

Published By: J.G.Stephan

01 Apr, 2020 | 08:58 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 7 மணியாகும் போது 146 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், குருணாகல் மற்றும் கொழும்பு - மருதானை ஆகிய பகுதிகளில் புதிதாக மூன்று தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த 146 பேரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், சீன பெண் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 123 பேர்  தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.



 நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில், யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டவர் மதபோதகர் ஒருவர் என தெரியவந்துள்ளது. அரியாலை பகுதியில் உள்ள மத போதகர் ஒருவருடன் தொடர்புகளை பேணிய மதகுரு ஒருவரே இவ்வாறு தற்போது கொரோனா தொற்று குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையின் கொரோனா வைரஸை காரணம் காட்டி  முடக்கப்பட்ட முதல் ஊர் யாழ். அரியாலை பிரதேசமாகும்.

கடந்த மார்ச் 21 ஆம் திகதி அந்த ஊர் முடக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஊர் இன்னும் மூன்று நாட்களுக்கு முற்றாக முடக்கப்பட்டிருக்கும் என அறிய முடிகின்றது. அந்த மூன்று நாட்களின் பின்னர் அந்த ஊர் சாதாரண ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவரப்படக் கூடிய சாத்தியங்கள் இருந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் 2 ஆவது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அது குறித்த அடையாளங்கள் தனிமைப்படுத்தலின் இறுதி நான்கு நாட்களில் பெரும்பாலும் காட்டும் என சுகாதார துறையினர் தெரிவிக்கும் நிலையில், தற்போது 14 நாட்கள் முடக்கப்பட்ட அரியாலை பகுதியின் இறுதி நாட்கள் நகர்ந்து வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு தொடர்ந்து மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ள சூழலிலேயே இரண்டாவது தொற்றாளர், அரியாலை மத நிகவுகளை மையப்படுத்திய தொடர்பின் பின்னணியில் அடையாளம் காணப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

குறித்த அரியாலை பகுதியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான போதகர் ஒருவரால் நடாத்தப்பட்ட நிகழ்வை மையப்படுத்தி, அப்பகுதியில் கொரோனா பரவுவதை தடுப்பதை நோக்காக கொண்டு அந்த ஊர் முடக்கப்பட்டதாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனநாயக்க முன்னர் கூறியிருந்தார்.

குருணாகல் தொற்றாளர்:
குருணாகல் போதனா வைத்தியசாலையில் நேற்று 48 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். வாரியபொல, கட்டுபொத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெக்குனுகொல்ல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முன்னர் புத்தளம் - நாத்தாண்டிய பகுதியில் அடையாளம் காணப்பட்ட இந்தியா சென்று, திரும்பிய தொற்றாளர் குடும்பத்தினர், குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றுள்ள நிலையிலேயே, கட்டுபொத்த பிரதேச வைத்தியசாலையில் இருந்து அப்பெண் கொரோனா தொற்று சந்தேகத்தில் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு முன்னெடுத்த பரிசோதனைகளின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பெண் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

 மருதானை தொற்றாளர்:
இந்நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட மூன்றாவது தொற்றாளர்  கொழும்பு மருதானை பகுதியைச் சேர்ந்தவராவார். பொரளை மருத்துவ ஆய்வு கூடத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போதே அவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 33 ஆகும். இதில் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை தவிர பத்தரமுல்லையில் இருவர் , பொரலஸ்கமுவை, கொத்தட்டுவ பகுதிகளில் தலா ஒருவர், கொலன்னாவையில் மூவர் மஹரகமவில் இருவர்,  நுகேகொடையில் நால்வர் இரத்மலானையில் நால்வர் மற்றும் தெஹிவளையில் ஐவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 இதற்கு அடுத்தபடியாக அதிக தொற்றாளர்கள் புத்தளம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அங்கு அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆகும். அதில் நேற்று முன் தினம் புத்தளத்தின் கடையன்குளம் மற்றும் நாத்தாண்டி பகுதிகளில் அடையாளம் காணப்பட்டோரும் உள்ளடங்குகின்றனர். அம்மாவட்டத்தை பொருத்தவரை, நாத்தாண்டி, மாரவில, மஹவெவ, புத்தளம் பகுதிகளிலேயே அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
இதில் அதிகமானோர் தற்போதும் முடக்க்ப்பட்டுள்ள அட்டுலுகம, பேருவளையின் சில கிராமங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். களுத்துறையைப் பொருத்தவரை பண்டாரகம, களுத்துறை, பாணந்துறை, பேருவளை பகுதிகளிலேயே தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
 
இதற்கு அடுத்த படியாக கம்பஹா மாவட்டத்தில் 11 தொற்றாளர்களும், கண்டி மாவட்டத்தில் 4 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கண்டியில் அக்குரணை பகுதியிலேயே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அக்குரணையின் தெலும்புகஹவத்தை மற்றும் சில இடங்கள் மட்டும்  முடக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் முடக்கப்படுவதாக பிரதேச செயலர் இந்திகா குமார அபேசிங்க கூறினார்.
 
இதனைவிட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மாவட்டங்களாக காலி, கேகாலை, மட்டக்களப்பு, மாத்தறை, பதுளை ஆகிய மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளான. இம்மாவட்டங்களில் தலா ஒவ்வொருவர் வீதம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் இடையே நேற்று வரை நாடளாவிய ரீதியில் உள்ள 25 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சந்தேகத்தில் மட்டும் 231 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இவ்வாறு கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை நேற்று முற்பகல் 10.00 மனியாகும் போது முடிவடைந்த 48 மணி நேரத்தில் 117 ஆல் அதிகரித்துள்ளதாக அந்த பிரிவின் புள்ளி விபரங்கள் தெரிவித்தன.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும்  பரிசோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

புத்தளத்தில் தொற்று அறிகுறியற்ற தனிமைப்படுத்தப்பட்டவர்களை பரிசோதித்த போது, தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்படும் போது அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு அறிகுறிகள் இருந்தாலோ இல்லாவிட்டாலோ கொரோனா பரிசோதனைகளை முன்னெடுக்க தற்போது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58