(எம்.எப்.எம்.பஸீர்)

தனது பணிக் குழுவிலுள்ள ஒருவரின் பெற்றோரில் ஒருவர் கொவிட் 19 நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதால்,  குறித்த ஊழியர் பணியாற்றிய கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வங்கிக் கிளையை 14 நாட்களுக்கு மூடியுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. 

நேற்று முதல் குறித்த வங்கிக் கிளை மூடப்பட்டுள்ளதுடன் அங்கு சேவையாற்றிய அனைத்து ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளடதுடன், வங்கிக் கிளையும் தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வங்கி மூடப்பட்டுள்ள காலப்பகுதியில் அக்கிளை  முற்றாக தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், ஊழியர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி தெரிவித்துள்ளது.

இந் நிலையில் மத்திய வங்கியின் சுற்றறிக்கை பிரகாரம் வங்கிச் சேவைகள் காட்டாய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மூடப்பட்டுள்ள குறித்த வங்கியின்  கொள்ளுப்பிட்டி கிளை வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறைமை ஊடாக சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவசியம் ஏற்படும் போது வேறு கிளைகள் ஊடாகவும்  தமது வங்கிச் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  அவ்வங்கி அறிவித்துள்ளது.