(செ.தேன்மொழி)

அரச ஊழியர்களின் செயற்பாடுகளை விமர்சித்து சமூகவலைத்தளங்களில் பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தலைமையகம் மேலும் கூறியுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதற்கேற்ற ஒத்துழைப்புகளை அரச ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நெருக்கடியான நிலைமையில் அரச ஊழியர்களால் விடப்படும் சிறு தவறுகளை காணொளியாக பதிவு செய்து அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விமர்சித்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு செயற்படும் நபர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதுடன்  அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

இவ்வாறான  நெருக்கடியான நிலையில் பொது மக்களின் நலன் கருதி செயலாற்றி வரும் அரச ஊழியர்களுக்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்காது அவர்களை விமர்சிப்பது முறையற்ற செயற்பாடாகும். இதனால் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.