(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷேட நடவடிக்கைகளில் இதுவரை  ஐந்து மாவட்டங்களில் உள்ள 7 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டு, அங்குள்ளவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள யாழ். மாவட்டத்தின் அரியாலை, களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம மற்றும் பேருவளையின் சில பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டி, கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை - போரத்தொட்டை ஆகியனவே இவ்வாறு முற்றாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளாகும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த பகுதிகளில் அதிக சாத்தியம் காணப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு அப்பகுதியில் வசிப்போர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனினும் அவ்வப்பகுதிகளில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள போதும், சிலர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை உளவுத்துறை, இராணுவத்தின் உதவியோடு பொலிஸார் தேடி வருவதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

குறிப்பாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 142 கொரோனா தொற்றாளர்களில், 102 பேர் தொடர்பில் தெளிவான தரவுகள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினரால் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த முதல் 102 தொற்றாளர்களும்  மிக நெருங்கிய தொடர்புகளை பேணியோரின் எண்ணிக்கை 2024 ஆகும்.

இந்நிலையில் அவர்களை  தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக தனிமைப்படுத்தப்பட்ட கிராமம் நீர்கொழும்பு, போரத்தொட்டை ஆகும்.

போரத்தொட்டையில் மரணித்த இரண்டாவது நபருக்கு வைரஸ் தொற்று எவ்வாரு ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. 

எவ்வாறாயினும் கொரோனாவால் இலங்கையில் பதிவான இரண்டாம் மரணத்தின் பின்னர் கொரோனா தொற்று பரவலுக்கான அச்சம் மேலும் வலுவடைந்துள்ளது. இரண்டாவதாக மரணமடைந்த குறித்த 64 வயது நபருக்கு கொரோனா எவ்வாறு எங்கிருந்து தொற்றியது என்பதும் அவர் பழகியவர்கள் தொடர்பிலும் தெளிவான முடிவொன்று இல்லாத நிலையில்,  அவரது தொலைபேசி உள்ளிட்டவற்றை பொலிஸ் பொறுப்பில் எடுத்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன்  அவரது மனைவி பிள்ளைகள் உள்ளிட்ட 13 குடும்ப உறுப்பினர்கள் விஷேட தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கொச்சிக்கடை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில்,  இறந்த நபரின் குடும்ப உறுப்பினர்களின் வாக்கு மூலம் பிரகாரம், குறித்த நபர் அண்மைய நாட்களில் வெளிநாட்டு பயணங்களை முன்னெடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் கடந்த மார்ச் 7 ஆம் திகதி அவர் யாழ் சென்று வந்துள்ளமையும் இதன்போது, பொது போக்குவரத்தையே அவர் பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் அவர் யாழ், சென்றதற்கான நோக்கம் எதுவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே  நேற்று முன் தினம் இறந்த குறித்த தொற்றாளரின் சடலம் நேற்று முன்தினம் அதிகாலை  தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த தொற்றாளர் நெருங்கி பழகியவர்களை கண்டறிய விஷேட விசாரணை நடை பெறும் நிலையில், அவரது ஊரான  போரத்தொட்டை முழுதும் முடக்கப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

முதலில் முடக்கப்பட்ட அரியாலைக்கு இன்னும் 4 நாட்களில் விடுதலை?

இலங்கையின் கொரோனா வைரஸை காரணம் காட்டி முடக்கப்பட்ட முதல் ஊர் யாழ். அரியாலை பிரதேசமாகும். கடந்த மார்ச் 21 ஆம் திகதி அந்த ஊர் முடக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஊர் இன்னும் நான்கு நாட்களுக்கு முற்றாக முடக்கப்பட்டிருக்கும் என அறிய முடிகின்றது.  அந்த நான்கு நாட்களின் பின்னர் அந்த ஊர் சாதாரண ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவரப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக பாதுகாப்பு மற்றும் சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அரியாலை பகுதியில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான போதகர் ஒருவரால் நடாத்தப்பட்ட நிகழ்வை மையப்படுத்தி, அப்பகுதியில் கொரோனா பரவுவதை தடுப்பதை நோக்காக கொண்டு அந்த ஊர் முடக்கப்பட்டதாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனநாயக்க கூறியிருந்தார்.

 பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனநாயக்கவின் தகவல்கள் பிரகாரம்,

குறித்த போதகர் கடந்த 10 ஆம் திகதி நாட்டுக்குள் வந்துள்ளார். அரியாலை பகுதி தேவாலயம் ஒன்றின் பிரதான மத போதகரே சென்று அழைத்து வந்துள்ளதுடன் நாட்டை விட்டு வெளியேறும் போது,  மானிப்பாய் பகுதி இளைஞர் ஒருவரின் வேனில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்து சுவிஸ் சென்றுள்ளார். 

இதுவரை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் பிரகாரம், குறித்த போதகர், கட்டுநாயக்கவில் இருந்து குருணாகல், வாரியபொல, கல்கமுவ ஊடாக  அனுராதபுரம் கிளிநொச்சியைக் கடந்து யாழ் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது அநுராதபுரத்திலும் கிளிநொச்சியிலும்  இரு உணவகங்களில் தரித்து உணவு பெற்று அங்கு சிறிது நேரம் காலம் கழித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அரியாலை தேவாலயம் அருகே உள்ள  பிரத்தியேக வீட்டிலேயே போதகரும் அவர் மனைவியும் தங்கியிருந்துள்ளதுடன் மார்ச் 11 ஆம் திகதி அவர் சட்டத்தரணி ஒருவரை சந்தித்துள்ளார். பின்னர் அப்பகுதியில் பாலர் பாடசாலை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அவர் பங்கேற்றுள்ளார்.  பின்னர் மார்ச் 12 ஆம் திகதி வங்கிக்கு சென்றுள்ள அவர் அங்கு 5 நிமிடங்கள் வரை இருந்துள்ளதுடன் அரியாலை கடை தொகுதிகளுக்கும் சென்றுள்ளார்.

13,14 ஆம் திகதிகளில் குறித்த போதகர் சுகயீனம் காரணமாக எங்கும் செல்லாமல் தேவாலயம் அருகேயுள்ள பிரத்தியேக தங்குமிடத்திலேயே இருந்துள்ளார்.  பின்னர் 15 ஆம் திகதியே மருந்துகள் இல்லாமல் நோய் குணப்படுத்தல் பிரதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அப்போதும் கடுமையாக சுகயீன நிலைமையில் இருந்துள்ள  போதகர், ஆரம்ப நிகழ்வை நடாத்தும் பொறுப்பை அரியாலை  தேவாலய பிரதான போதகரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அந்நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், 20 நிமிடங்கள் வரை மட்டுமே அவர் அந்த நிகழ்வை நடாத்தியுள்ளார். அதனையடுத்து அவர் அன்றைய தினமே இரவு 8.30 மணிக்கு இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளார்,

இந்நிலையில் சுவிஸ் சென்ற பின்னர் மத போதகரின் மனைவி, அரியாலை தேவாலய போதகருக்கு அழைப்பை ஏற்படுத்தி, தனது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனையடுத்தே சுகதார அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் அரியாலையை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

களுத்துறை- அட்டுலுகம

டுபாய் சென்று வந்த நண்பர்கள் இருவர், தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகமல் ஊர் முழுதும் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அட்டுலுகம கிராமம் கடந்த மார்ச் 27 ஆம் திகதி முதல்  முற்றாக முடக்கப்பட்டுள்ளது.  களுத்துறை மாவட்டத்தின் , பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டுலுகம, இவ்வாறு வெளித் தொடர்புகளில் இருந்து முற்றக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன்  அந்த ஊரை சேர்ந்த சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரம் பேர் வரை இவ்வாறு அவர்களது வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி முழு ஊரையும் ஒரு தனிமைப்படுத்தல் நிலையம் போன்று முடக்கி வைத்துள்ளதாகவும், 14 நாட்களுக்கு  அந்த ஊருக்குள் எவரும் செல்லவோ அங்கிருந்து எவரும் வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டாது என களுத்துறை  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரங்கசிங்க மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர் யூ.டி.சி. ஜயலால் ஆகியோர் தெரிவித்தனர்.

குறித்த கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர், மிக நெருங்கிப் பழகிய 26 பேரை அவ்வூருக்குள்ளேயே பொது இடமொன்றில் மருத்துவ கண்கானிப்பின் கீழ் தனிமைப்படுத்த சுகாதார துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நபர்,   டுபாய்க்கு குறித்த அட்டுலுகம - மாராவ கிராமத்துக்கு மிக அருகில் உள்ள கலிடெங்மண்டிய கிராமத்தில் உள்ள நண்பர் ஒருவருடன் கடந்த 17 ஆம் திகதி டுபாய் சென்றுள்ளார். டுபாயில் 2 நாட்கள்  தங்கியிருந்த பின்னர் கடந்த 19 ஆம் திகதி  நாட்டுக்கு வந்துள்ளார். இவ்வாறு வருகை தந்த அவர், சுகாதார தரப்புக்கோ அல்லது பாதுகாப்பு பிரிவினருக்கோ அது குறித்து அறிவிக்காமலும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடாமலும் இருந்துள்ளார்.

ஊரெங்கும் சுற்றித் திரிந்துள்ள குறித்த நபர் தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி பண்டாரகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அன்றைய தினமே குறித்த நபரின் வீட்டுக்கு  சுகாதார அதிகாரிகளுடன் பொலிஸார் சென்றுள்ளனர்.  இதன்போது அந் நபரிடம் பொலிஸார்  விசாரித்த போது முதலில் தான் டுபாய் சென்றதை அந்நபர் ஏற்றுக்கொள்ளாமல் மறைத்துள்ளார். 

நீண்ட விசாரணைகளின் போதே அவர் அதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை பொலிஸாரும் சுகாதாரத் துறையினரும் அவ்வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தியுள்ளனர். 

இந்நிலையில் மறு நாள் 25 ஆம் திகதி கொரோனா அறிகுறிகள் தென்படவே அவர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா இருப்பது 26 ஆம் திகதி மாலை உறுதியான நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே தொற்றாளருடன் டுபாய் சென்று திரும்பிய அவரது நண்பருக்கு இதுவரை கொரோனா தொற்று அறிகுறிகள் காட்டாத நிலையில், அவரும் அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

அந் நபருடனும் தொடர்புகளை பேணியவர்களை தேடிவரும் பொலிஸார் அவர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரங்கசிங்க கூறினார். இதனிடையேகுறித்த கொரோனா தொற்றாளரின் தந்தை மற்றும் சகோதரிக்கும் அந்த தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

நேற்று பிந்திக் கிடைத்த தகவல்கலின் பிரகாரம், குறித்த டுபாய் சென்றவந்த தொற்றாளரின் தாயாரான  அட்டுலுகம - மாராவ உப தபாலகத்தின் பிரதி பொறுப்பதிகாரிக்கும், அவரது இளைய மகள், மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது குறித்த சந்தேகத்தில் அவர்கள் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டிருந்தனர்.

களுத்துறை - பேருவளை

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  5 கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக  பேருவளை பிரதேச செயலாளர் சத்துர மல்ராஜ் கூறினார்.  பேருவளை - பன்வில பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த ஐந்து கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.  பன்வில, சீனன் கோட்டை,  அக்கரகொட, கரந்தகொட,  அம்பேபிட்டி ஆகிய கிராமங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

பன்வில பகுதியில் கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர், சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் சாரதியாக பணியாற்றியவராவார். இருதியாக  அவர் இரு வர்த்தகர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்துள்ளார். அவ்விரு வர்த்தகர்களும் தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தொற்று இருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் குறித்த தொற்றாளர்  20 பேருடன் நெருங்கிப் பழகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரையும் பிரத்தியேகமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன கூறினார்.

இதுவரை பேருவளை பகுதியில்  7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 18  தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இந்த பின்னணியிலேயே பேருவளையின் குறித்த 5 கிராமங்களும்  முடக்கப்பட்டுள்ளன.

கண்டி - அக்குரணை

கண்டி, அக்குரணை பகுதியில் இந்தியா சென்று திரும்பிய  கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்புகள்,  சென்று வந்த இடங்களை ஆராய்ந்த சுகாதார தரப்பும் பாதுகாப்புத் தரப்பும், அக்குரணை நகரை முற்றாக கடந்த 28 ஆம் திகதி முதல் முடக்கின.

அக்குரணை செலம்புகஹ வத்தை பகுதியைச் சேர்ந்த புடவை விற்பனையாளர் எய்யும் என்பவர் மற்றொருவருடன் இந்தியா சென்று சுமார் 7 நாட்கள் வரை தங்கியிருந்த பின்னர் கடந்த 15 ஆம் திகதி சென்னையில் இருந்து இலங்கை வந்துள்ளார்.

இலங்கை வந்த அவர் ஊர் முழுதும் சுற்றியுள்ள நிலையில்,  நான்கு நாட்களின் பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகே உள்ள சிறிய மருந்தகம் ஒன்றுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இதன்போது வைத்தியர் விசாரித்த போதும் இந்தியா சென்றதை அவர் மறைத்துள்ளர்.

இந் நிலையில் 27 ஆம் திகதி அவருக்கு கடுமையான சுகயீனம் ஏற்படவே,  28 ஆம் திகதி காலை அவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்ததுள்ளதாக  கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரணவீர தெரிவித்தார்.   

இந்நிலையில் அவரது தொடர்பாடல் வட்டம் ஊரில் உள்ள 347 குடும்பங்கள் என அனைவரதும் பதுகாப்பையும் கருதி முழு ஊரையும் முடக்கி தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

 புத்தளம் மாவட்டம் - கடையன் குளம், நாத்தாண்டி

புத்தளம் - கடையன் குளம் பகுதியில் இருந்து இந்தோனேஷியா, மலேஷியா தாய்லாந்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்று வந்த 5 பேர் கொண்ட குழுவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்தே அந்த முழு ஊரும் முடக்கப்பட்டது.  குறித்த ஐவரும் கடந்த பெப்ர்வரி மாதம் 26 ஆம் திகதி நாட்டிலிருந்து சென்றுள்ள நிலையில் கடந்த 15 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதியானதாகவும் புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா உறுதி செய்தார்.

குறித்த ஆன்மீக சுற்றுலா குழுவில் இருந்த தனிமைப்படுத்தலுக்கு உள்ளான  குறித்த 50 வயதுடைய நபர் கடந்த 27 ஆம் திகதி குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  அவருக்கு கொரோன தொற்றிருப்பது 28 ஆம் திகதி கண்டறியப்பட்டது. இந்நிலையில் அவருடன் நெருக்கமாக பழகிய 18 பேர், புத்தளம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாத்தாண்டி:

நாத்தாண்டி  நகரின் ஒரு பகுதி முடக்கப்பட, அப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் ஒருவரே காரணமாவார். கடந்த மார்ச் 11 ஆம் திகதி வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின்  சென்னைக்கு சென்றுள்ள அவர் மீள 12 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.  புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேராவின் தகவல்களின் பிரகாரம், குறித்த நபருக்கு கடந்த 27 ஆம் திகதி காய்ச்சல் ஏற்படவே அவர் மாரவில வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாகவும்,  அங்கிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்ட நிலையில் 28 ஆம் திகதி அவருக்கு கொரோன தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

குறித்த நபர் தான் இந்தியா சென்று வந்தமையை சுகாதார அதிகாரிகளுக்கோ பொலிஸாருக்கோ அறிவிக்காமல் ஊர் முழுதும் சுற்றியுள்ளதாகவும், கொழும்புக்கும் வந்து சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய 14 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாத்தாண்டியின் ஒரு பகுதி முடக்கப்பட்டது.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் தொற்றாளரின் மனைவி, இரு இளம் வயது பிள்ளைகள் மற்றும் மகளின் 4 மாதா குழந்தைக்கு கொரோனா தொற்றிருப்பது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.