இந்திய தலைநகரில் இடம்பெற்ற இஸ்லாமிய மத நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பெரும் எண்ணிக்கையானர்வர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்து  குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் இடம்பெறுகின்றன.

புதுடில்லியின் மர்காஸ் நிஜாமுதீன் பள்ளிவாசலில்  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பலர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தப்பிளிகி ஜமாத் என்ற 20 ம் நூற்றாண்டு இஸ்லாமிய மத அமைப்பொன்றின் நிகழ்வில் கலந்துகொண்ட பலரே  வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக  சமூக தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை புறக்கணித்து 100 வருடபழமை வாய்ந்த மசூதியில் மார்ச் 8 திகதி முதல் 21 ம் திகதி வரை 216 வெளிநாட்டவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானவர்கள்  தங்கியிருந்துள்ளனர்.

இந்தியாவின் பல மாநிலங்களில் பெருமளவானவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்ப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த மசூதியில் தங்கியிருந்துவிட்டு தங்கள் மாநிலங்களிற்கு திரும்பிய பலரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

புதுடில்லியின் நிஜாமுதீன் மசூதியிலிருந்து  மாநிலத்திற்கு திரும்பிய ஐம்பது பேர் நோய் தொற்றிற்குள்ளாகியுள்ளமை தமிழ் நாட்டில் உறுதியாகியுள்ளது.

புதுடில்ல நிஜாமுதீனிற்கு சென்று திரும்பி ஆறு பேர் தெலுங்கானாவில் உயிரிழந்துள்ளனர், ஸ்ரீநகரில் ஒருவர் உயிரிழந்துள்ளார், அந்தமான் தீவில் பத்துபேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 1800 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

காஸ்மீரை சேர்ந்த 100 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை ஆந்திரபிரதேசத்தில் அதிகாரிகள் 700 பேரை தேடி வருகின்றனர்.

இந்த நிகழ்வில் இலங்கை உட்பட பல உலக நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 300 வெளிநாட்டவர்களிற்கு எதிர்காலத்தில் இந்தியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுடில்லியில் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 450 பேரிற்குநோய் அறிகுறிகள் தென்படுகின்றன என முதலமைச்சர் அர்விந் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கட்டிடத்திலிருந்து மக்களை வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ள புதுடில்லி அதிகாரிகள் இந்தியாவில் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்ட பின்னர் இங்கு ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிக்குண்டிருந்தனர் எனவும் இவர்களில் 30 பேரிற்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

300பேரிற்கு நோய் அறிகுறிகள் தென்படுகின்றன700 பேரை தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு மாற்றியுள்ளோம் என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியாவிலிருந்து வந்த போதகர்களால் வைரஸ் பரவியுள்ளது என மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.