(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று (31.03.2020) பிற்பகல் 5 மணிவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், மேலும் 10 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இன்றைய தினம் மட்டும் 20 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதன்மூலம் நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 142 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளனர்.

 இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அதிக எண்ணிக்கையிலான  தொற்றாளர்கள் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டனர். 

இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது மட்டும் 20 கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.  

இந் நிலையில் இலங்கையில் இதுவரை 142 கொரோனா தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  

மாரவில மற்றும் நீர்கொழும்பை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், சீன பெண் ஒருவர் உட்பட 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

இந் நிலையில் இரு வெளிநாட்டவர்கள் உட்பட 123 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இன்றைய தினம்  அடையாளம் காணப்பட்ட 20 வைரஸ் தொற்றாளர்களில் பெரும்பாலானோர் மேல் மற்றும் மத்திய மாகாணங்களை சேர்ந்தோர் என  சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

 குறிப்பாக தற்போது முடக்கப்பட்டுள்ள   கண்டி, அக்குரணை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளரின் மனைவி, மகன் மற்றும் மருமகள் அகையோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக  மத்திய மாகாண சுகாதார சேவைகள் பனிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன கூறினார். 

இந் நிமிலையில் அவர்கள் மூவரையும்  கண்டி தேசிய வைத்தியசாலையில் இருந்து அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எஉக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, நாடளாவிய ரீதியில் 2 வெளிநாட்டவர்கள் உட்பட 173 சந்தேகத்தில் 23 வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

குறிப்பாக கொரோனா தொற்று பரவலை  தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின்  அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.